/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் மின் மயானம் அமைக்கப்படுமா?
/
செஞ்சியில் மின் மயானம் அமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 04, 2025 12:21 AM
செஞ்சி : செஞ்சியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக செஞ்சி உள்ளது. செஞ்சியை சுற்றி ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகி இருப்பதால், மக்கள் தொகை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர், சாலை, மின் விளக்கு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை போன்று, மனிதருக்கு இறுதி மரியாதை அளிக்கும் இடமான சுடுகாடு, இடுகாடுகளை மேம்படுத்த வேண்டும்.
செஞ்சியில் சக்கராபுரம், பீரங்கிமேடு, ராஜேந்திரா நகர், முல்லை நகர் பகுதி மக்களுக்கான சுடுகாடு, இடுகாடு திண்டிவனம் சாலை சங்கராபரணி ஆற்றுப்பாலத்திற்கு கீழ் உள்ளது.
செட்டிப்பாளையம், சிறுகடம்பூர், பெரியகரம், கிருஷ்ணாபுரம், வ.ஊ.சி., நகர் பகுதி மக்களுக்கான இடுகாடு, சுடுகாடு மேல்களவாய் சாலை சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ளது.
2 சுடுகாடுகளும் பராமரிப்பின்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதுடன், எரி மேடைகள் உடைந்து கிடக்கிறது. இதனால் மண் தரையில் உடல்கள் எரியூட்டப்படுகிறது.
இறுதி சடங்கின்போது, உடல்களை சுற்றி வருபவர்களின் பாதங்களை உடைந்த கண்ணாடி சில்லுகள், சிதறி கிடக்கும் எலும்புகள் பதம் பார்க்கிறது.
மறுநாள் ஆற்றில் அஸ்தியை கரைக்க செல்பவர்கள் கல்லிலும் முள்ளிலும் அவதிப்பட்டு அசுத்தமான தண்ணீரில் மூழ்கி அவதியுறுகின்றனர்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வாக மின் மயானம் அல்லது எரிவாயு தகன மேடை அமைக்க பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த தேர்தலின்போது கூட செஞ்சியில் மின் மயானம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனவே, மஸ்தான் எம்.எல்.ஏ., செஞ்சியில் மின் மயானம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மின்மயானம் அமைத்து தர வேண்டும் என செஞ்சி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.