செஞ்சி கோட்டை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா? முதல்வர் கவனம் செலுத்த கோரிக்கை
செஞ்சி கோட்டை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா? முதல்வர் கவனம் செலுத்த கோரிக்கை
UPDATED : ஜூன் 10, 2026 12:20 PM
ADDED : ஜூன் 09, 2026 06:11 PM

செஞ்சி: யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ள பழமையும், பாரம்பரியமும் மிக்க செஞ்சி கோட்டையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் எதிரிகள் உட்புக முடியாத எங்கு கோட்டை என பல கோட்டைகளை வீழ்த்தி வெற்றி கண்ட மராட்டிய மன்னன் மாவீரன் சிவாஜியால் வர்ணிக்கப்பட்ட கோட்டை, செஞ்சி கோட்டை. தமிழகத்தின் கட்டடக்கலை, அறிவியல் தொழில் நுட்பம், வீரம், கலாசாரம், பண்பாடு, நாகரீகம் இவற்றின் பிரதிபலிப்பாக செஞ்சி கோட்டை உள்ளது.
காடு, மலைகள் என இயற்கை சூழலில் மூன்று மலைகளையும், இரண்டு குன்றுகளையும் இணைத்து 12 கி.மீ., நீளத்திற்கான மதில் சுவரால் இணைத்து கட்டப்பட்ட பிரம்மாண்ட கோட்டை. இப்போதுள்ள செஞ்சிக்கோட்டை பல போர்களை சந்தித்தது. ஏராளமான சிதைவுகள், மறு சீரமைப்புகள் செய்யப்பட்ட கோட்டை ஆகும்.
இந்த கோட்டை விஜயநகர மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்தபோது தொடர்ந்து 20 ஆண்டுகள் கோட்டையை விரிவுபடுத்தினர். அப்போது நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் கல் உடைக்கும் தொழிலாளர்கள், 6000 தச்சு தொழிலாளர்கள், 6,000 கருமாரர்கள், 6,000 மண் தோண்டும் தொழிலாளர்கள் என தினமும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டுட்டனர் என வரலாற்று ஆய்வாளர் சுப்புராயலு தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டையின் உள்ளே கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், கண்காணிப்பு மேடைகள், காவலர் கூண்டுகள், தர்பார் மண்டபம், கல்யாண மகால், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற்களஞ்சியம், மலையின் உச்சியில் இழுவை பாலம், எதிரிகள் கடக்க முடியாத அகழிகள் என சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
செஞ்சி கோட்டையின் பிரம்மாண்டமும், பழமையும் உலக பாரம்பரிய சின்னமாக ஏற்பதற்கு தகுதியானதாக இருப்பதால் கடந்த ஆண்டு மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று யுனொஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. யுனொஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த பின்னரும் மத்திய, மாநில அரசுகள் செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வில்லை.
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி கர்நாடக, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டைக்கு இத்துறை மூலம் குறைந்த அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் கழிவறை, குடிநீர் வசதிகளை குறைந்த அளவிலேயே செய்துள்ளனர். கூடுதல் வசதிகள் செய்ய மத்திய மாநில அரசுகள் சுற்றுலா துறைகள் மூலமே திட்டங்களை செயல்படுத்த முடியாது.
வாஜ்பாய் ஆட்சியின் போது செஞ்சி கோட்டையில் ரோப் கார் திட்டம் கொண்டு வர ஆய்வு நடந்தது. அடுத்து ஆட்சி மாற்றத்தால் திட்டம் கைவிடப்பட்டது. இதே போல் சர்க்கரை குளம், செட்டி குளத்தில் படகு சவாரி விடும் திட்டம் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இத்திட்டங்களை நிறைவேற்ற முதலில் செஞ்சி கோட்டையை தமிழக அரசு சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாடு ஓட்டல், தங்கும் விடுதி, ஒளி, ஒலி காட்சி, பூங்காக்கள் என ஏராளமான புதிய திட்டங்களை கொண்டுவர முடியும். இதன் மூலம் செஞ்சிக்கு மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராகவும், த.வெ.க.,வில் முக்கிய தலைவராகவும் உள்ள அமைச்சர் ஆனந்த், செஞ்சி கோட்டையின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்று செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்து புதிய சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என செஞ்சி தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
