செஞ்சி தொகுதியில் எம்.பி.,- எம்.எல்.ஏ.,அலுவலகம்... திறக்கப்படுமா?குறைகளை யாரிடம் தெரிவிப்பது என மக்கள் குமுறல்
செஞ்சி தொகுதியில் எம்.பி.,- எம்.எல்.ஏ.,அலுவலகம்... திறக்கப்படுமா?குறைகளை யாரிடம் தெரிவிப்பது என மக்கள் குமுறல்
UPDATED : ஜூலை 01, 2026 04:37 PM
ADDED : ஜூலை 01, 2026 04:31 PM
செஞ்சி: செஞ்சி தொகுதி மக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க முடியாமல் இருப்பதுடன், தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்களும் கிடப்பில் இருப்பதால் தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
செஞ்சி தொகுதிக்குள் செஞ்சி, மேல்மலையனுார் என இரண்டு தாலுகா, இரண்டு ஒன்றியங்களும், செஞ்சி, அனந்தபுரம் பேரூராட்சியும், ஆன்மிக ஸ்தலமான மேல்மலையனுாரும் உள்ளன.
விவசாயம் சார்ந்த இந்த தொகுதியில் இன்னமும் விவசாயத்திற்கான அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை. தேவையான நேரத்தில், தேவையான அளவு உரங்கள், விதைகள் கிடைப்பதில்லை. செஞ்சி, அவலுார்பேட்டை, வளத்தியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வந்தாலும் இங்கு முழு அளவில் கொள்முதல் செய்வதில்லை. இடப்பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்கின்றனர்.
அடிப்படை வசதி குறைபாடுகளால் விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகளும் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் முழு அளவில் பணியாளர்களை அமர்த்தி கொள்முதல் செய்ய எந்த ஆட்சியினரும் அக்கரை காட்ட வில்லை.
செஞ்சி தொகுதியின் ஒரே நீர் ஆதாரமாக உள்ள நந்தன் கால்வாய், பெஞ்சால் புயலில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. இதை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.
யுனெஸ்கோ செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த அறிவிப்பால் செஞ்சி கோட்டை சர்வதேச சுற்றுலா தலமாக மாறி உள்ளது. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த சந்தற்பத்தில் செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்து படகு சவாரி, ரோப்கார் வசதி உள்ளிட்ட புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இதுபற்றி அக்கரையில்லாமல் உள்ளன.
செஞ்சி வழியாக திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2008 ம் ஆண்டு துவங்கப்பட்ட ரயில்வே திட்டம் 18 ஆண்டுகள் முடிந்த நிலையில் 10 சதவீத பணிகள் கூட நிறைவடைய வில்லை.
மேல்மலையனுருக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பக்கர்கள் பாதுகாப்புடன் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய யாத்ரிகர் நிவாஸ் இல்லை.
மேல்மலையனுாருடன் இணையும் சாலைகளை அகலப்படுத்தவும், வட்ட சாலை அமைக்கவும், வாகனங்கள் நிறுத்த புதிய இடங்களை தேர்வு செய்யவும் விரிவான புதிய திட்டங்கள் வேண்டும்.அத்துடன் மேல்மலையனூரில் அரசு மருத்துவமனை, நீதிமன்றம் என ஏராளமாக திட்டங்கள் கிடப்பில் உள்ளன.
இந்த திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டியது மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் கடமை. தற்போது ஆரணி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வை சேர்ந்த தரணிவேந்தன் எம்.பி.,யாக உள்ளார். இவர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள எரமலூர் கிராமத்தை சேர்ந்தவர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வை சேர்ந்த கணேஷ்குமார் எம்.எல்.ஏ., வாக வெற்றி பெற்றார். இவரும் வந்தவாசியை சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
தரணிவேந்தன் எம்.பி., தி.மு.க.,வில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளராகவும், எம்.எல்.ஏ., கணேஷ்குமார் பா.ம.க., இளைஞரணி மாநில தலைவராகவும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
இவர்கள் இருவரும் அரசியல் ரீதியாக எப்போதும் பிசியாக இருப்பவர்கள். இருவரும் செஞ்சி தொகுதியில் அலுவலகம் அமைக்காமல் உள்ளனர்.
தாலுகா அலுவலகங்களிலும், ஒன்றிய அலுவலகங்களிலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், குடிநீர், கழிவுநீர், தெருவிளக்கு, சாலை வசதி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் விடுக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றாத போது பொது மக்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடமே முறையிட முடியும். தற்போது செஞ்சி நகரம் உட்பட தொகுதியில் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை தலையாய பிரச்சனையா உருவெடுத்துள்ளது.
ஆனால் தொகுதி மக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. தேர்தல் நேரத்தில் அதிகாலை 6:00 மணிக்கே கிராமங்களுக்கு சென்று ஓட்டு கேட்டவர்கள் ஜெயித்த பிறகு நன்றி சொல்ல கூட வரவில்லை என்பது தொகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மாறிவரும் அரசியல் சூழ்நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மக்களிடம் இருந்து விலகி இருப்பது அவர்கள் மீது மட்டுமின்றி அவர்கள் சார்ந்த கட்சிகள் மீதும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும்.
எம்.பி., எம்.எல்.ஏ..க்கள் தினமும் மக்களை சந்திக்க முடியாவிட்டாலும் அலுவலகம் திறந்து பொருப்பாளர் ஒருவரை நியமனம் செய்து பொது மக்களின் புகார்களை புதிவு செய்யவும், வாரம் ஒரு முறை தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கவும் வேண்டும்.
அத்துடன் கிடப்பில் உள்ள ரயில்வே, திட்டம், சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
