நீர்நிலை சீமைக் கருவேல மரங்கள்... அகற்றப்படுமா! கலெக்டரின் அதிரடி நடவடிக்கை தேவை
நீர்நிலை சீமைக் கருவேல மரங்கள்... அகற்றப்படுமா! கலெக்டரின் அதிரடி நடவடிக்கை தேவை
UPDATED : ஜூன் 29, 2026 11:10 PM
ADDED : ஜூன் 29, 2026 11:02 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் காலி இடங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளான ஏரிகள், குளங்கள், குட்டைகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த மரங்களின் வேர் பகுதி பூமியில், அதிக ஆழம் வரை சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாக்க அரசு மற்றும் தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள, சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என, ஐகோர்ட் கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் தனி நபர்கள் பெயரளவில் ஈடுபட்டனர். பின், இப்பணி மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் ஏரி உள்ளிட்ட நீர் மற்றும் தனியார் இடங்களில் சீமை கருவேல மரங்கள் காடுபோன்று வளர்ந்து காணப்படுகிறது. பருவமழை போதிய அளவு இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வறட்சி ஏற்படும் சூழ்நிலை காணப்படுகிறது.
நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள் நீர்நிலைகள் மற்றும் தனியார் இடங்களில் அகற்றப்படாமல் உள்ளதால், மாவட்டத்தில் மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. விழுப்புரம் மருதுார் ஏரி, வழுதரெட்டி ஏரி உட்பட மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் சீமை கருவேல மரங்களின் காடாக மாறிவிட்டது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்ற அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும், கோர்ட் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தனி நபருக்குச் சொந்தமான பட்டா இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் பட்டாதாரர்களே தங்களது சொந்த செலவில் அடுத்த மாதம் இறுதிக்குள் அகற்ற வேண்டும்.
தவறும்பட்சத்தில் தனி நபர் பட்டா இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அகற்றிவிட்டு அதற்கான செலவினத்தை பட்டாரதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என புதுக்கோட்டை கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
தனி நபருக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை பட்டாதாரர்கள் அகற்ற தவறும் பட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அகற்றி அதற்கான செலவினத்தை வசூலிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
