செஞ்சியில் சாலையோர மின் கம்பங்கள் அகற்றப்படுமா?சாலை விரிவாக்கத்திற்கு நடவடிக்கை அவசியம்
செஞ்சியில் சாலையோர மின் கம்பங்கள் அகற்றப்படுமா?சாலை விரிவாக்கத்திற்கு நடவடிக்கை அவசியம்
UPDATED : ஆக 04, 2026 04:42 PM
ADDED : ஆக 04, 2026 04:30 PM

செஞ்சி: செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலை விரிவாக்கம் செய்ய தடையாகவும் உள்ள மின் கம்பங்களை அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை, பெங்களூருக்கும், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும் பஸ், சரக்கு போக்குவரத்திற்கு செஞ்சியே பிரதான வழியாக உள்ளது.
இந்த வழியாக வரும் சரக்கு லாரிகள், கார், வேன்களில் ஒரு பகுதியினர் மட்டும் பைபாஸ் வழியாக செல்கின்றனர். பஸ்களில் 90 சதவீத பஸ்கள் பயணிகளை இறக்கவும், ஏற்றவும் செஞ்சி வழியாகவே செல்கின்றன.
சில ஆண்டுகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கும் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திற்கு மட்டும் அதிக பக்தர்கள் சென்ற நிலை மாறி பவுர்ணமி, பிரதோஷ தினங்களிலும் அதிக வாகனங்கள் செல்கின்றன.
பெங்களூருவில் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வார விடுமுறையை கொண்டாட புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களில் பெரும்பகுதி செஞ்சி நகரின் வழியாக செல்கின்றன.
அத்துடன் நகர வளர்ச்சி காரணமாக செஞ்சியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து விட்டது. அத்துடன் சாலையோர கடைகளும் அதிகரித்து விட்டன.
இதன் காரணமாக செஞ்சியில் பிரதான சாலைகளான திண்டிவனம், திருவண்ணாமலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
குறிப்பாக 100 அடி அகலம் கொண்ட திருவண்ணாமலை சாலையில் தார் சாலையை ஒட்டி மின் கம்பங்கள் உள்ளன. பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சற்று ஒதுங்கினாலும் மின் கம்பத்தில் உரசும் ஆபத்துள்ளது.
அத்துடன் மின் கம்பங்களை எல்லையாக வைத்தே சாலையோர கடைகளை நடத்தி வருகின்றனர். மின் கம்பங்கள் இடையூறாக இருப்பதால் சாலை விரிவாக்கம் செய்ய முடியாமல் உள்ளது.
எனவே சில ஆண்டுகளுக்கு முன் மின் கம்பங்களை அகற்ற அரசு தரப்பில் முடிவு செய்தனர். முதல் கட்டமாக தெற்கு பகுதி மின் கம்பங்களை சாலையோரம் கொண்டு சென்றனர்.
வடக்கு பகுதில் ஒரு ஆண்டிற்கு முன் சாலையோரம் புதிதாக மின் கம்பம் நட்டனர். ஆனால், பழைய மின் கம்பங்களில் இருந்து மின் கம்பிகளை புதிய கம்பங்களுக்கு மாற்றாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
செஞ்சியில் வரும் 7ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்ற அரசு தரப்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த பணியின் போது மின் கம்பங்கள். குறுக்கே இருந்தால் திருவண்ணாமலை சாலையில் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்ற முடியாது. அத்துடன் சாலை விரிவாக்கமும் செய்ய முடியாது.
எனவே ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முன் மின் கம்பங்களை அகற்ற மின்வாரிய அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
