திண்டிவனத்தில் டிப்ளமோ விவசாய பட்டய படிப்பு மீண்டும் துவங்கப்படுமா? மாவட்ட நிர்வாக நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
திண்டிவனத்தில் டிப்ளமோ விவசாய பட்டய படிப்பு மீண்டும் துவங்கப்படுமா? மாவட்ட நிர்வாக நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 27, 2026 05:55 PM
ADDED : ஜூலை 27, 2026 04:00 PM
திண்டிவனம்: தமிழ்நாடு வேளாண் வேளாண் பல்கலைக் கழகத்தின், திண்டிவனம் எண்ணெய் வித்துக்குள் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பட்ட டிப்ளமோ விவசாய பட்டயப்படிப்பு மீண்டும் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 100 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையம் கடந்த 1929ம் ஆண்டு முதல் வேளாண் ஆராய்ச்சி நிலையமாக செயல்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு பின், தமிழக வேளாண் துறையின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கி வந்தது. கடந்த 1982ம் ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் எண்ணெய் வித்துக்குள் ஆராய்ச்சி நிலையமாக செயல்படுகிறது.
இந்த வளாகத்திலேயே கடந்த 2004ம் ஆண்டு முதல் வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே.,) செயல்பட்டு வருகிறது.
விவசாயத்திற்கு பெயர் பெற்ற விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பல ஆண்டுகளாக, எண்ணெய் வித்துக்குள் ஆராய்ச்சி மையத்தின் மூலம் டிப்ளமோ விவசாய பட்டயப்படிப்பு மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை பெற்று வந்தனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் (உயிரியியல் பாடப்பிரிவு) 2 ஆண்டு டிப்ளமோ விவசாய பட்டய படிப்பு முடித்தால், தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் உதவி வேளாண் அலுவலர் போன்ற அரசுப் பணி தேர்வாணையத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்பு இருந்து வந்தது.
விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கடலுார், திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் டிப்ளமோ விவசாய படிப்பை, திண்டிவனத்தில் உள்ள எண்ணெய் வித்துக்குள் ஆராய்ச்சி மையம் மூலம் படித்தனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, திடீரென நிர்வாக காரணங்களால் இம்மையத்தில் டிப்ளமோ விவசாய படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இதனால், தொலைதுாரமுள்ள திருச்சி மாவட்டம், குமுளூர், கன்னியாகுமாரி மாவட்டம், பேச்சிப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் பகுதிகளில் உள்ள அரசு வேளாண் பல்லைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அதிகப்படியான விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் கொண்ட முதன்மை மாவட்டமாகும். திண்டிவனத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விவசாய பட்டய படிப்பை மூடுவது இப்பகுதி விவசாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், திண்டிவனம் எண்ணெய் வித்துக்குள் ஆராய்ச்சி நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை மீண்டும் துவங்கி செயல்பட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டிவனம் தொகுதியைச் சேர்ந்த தற்போதுள்ள சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது .
