கலெக்டர் அலுவலக இ - சேவை மையம்: அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படுமா?
கலெக்டர் அலுவலக இ - சேவை மையம்: அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படுமா?
UPDATED : ஆக 16, 2026 05:08 PM
ADDED : ஆக 16, 2026 02:40 PM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், இ-சேவை மையத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தின் தரைத் தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அரசு துறையால் வழங்கப்படும் அனைத்துவித சான்றிதழ்களுக்கும், விவசாயிகளுக்கான பட்டா மாற்றம், பயிர் காப்பீடு திட்டத்திற்கான பதிவு போன்ற பல்வேறு பணிகளுக்கு, இந்த இ-சேவை மையத்தில் பதிவு செய்து, சான்றிதழ் நகல் எடுத்து தரப்படுகிறது.
இந்த இ-சேவை மையம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படுகிறது. மையத்தில், திடீரென மின்வெட்டு ஏற்படும்போது, பேட்டரி பேக்கப் இல்லாததால், பதிவு பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
இதேபோல், 'ஏசி' வசதியில்லாததால், கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்ற சாதனங்கள் வீணாகிறது. மின் வெட்டு ஏற்படும் போதும், பேட்டரி பேக்கப் இல்லாததால் எலக்ரானிக் சாதனங்கள் பாதிக்கிறது.
அதே போன்று, கலெக்டர் அலுவலக தரைத் தளத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 தியாகிகளின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தியாகிகளை கவுரவிக்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த புகைப்படங்கள், ஊர் பெயர்களுடன், அமைக்கப்பட்டு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆனால், சுவற்றின் ஓரமாக உள்ள இந்த தியாகிகளின் கருப்பு வெள்ளை நிற புகைப்படங்கள் போதிய வெளிச்சம் இல்லாத இடத்தில் வைத்திருப்பதால் பொதுமக்கள் பார்வைக்கு தெரியவில்லை.
இதனால், தியாகிகள் படங்கள் இருக்கும் பகுதியில் மின் விளக்கு வைத்து வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும், சுதந்திர தினம், குடியரசு தினங்களில் இந்த படங்களுக்கும் மின் விளக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
