/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலை பணி வேகம் எடுக்குமா?: மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
/
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலை பணி வேகம் எடுக்குமா?: மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலை பணி வேகம் எடுக்குமா?: மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலை பணி வேகம் எடுக்குமா?: மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
ADDED : நவ 29, 2024 04:55 AM

திண்டிவனம்: திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலை பணிகள் காலக்கெடுவை தாண்டி நடந்து வருகின்றது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரை செல்லும் இரு வழிச்சாலையானது, வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. இந்த சாலையில் அதிக அளவில் கல் குவாரிகள் இருப்பதால், டிப்பர் லாரிகள் அதிக அளவில் செல்கின்றது.
மேலும் இந்த சாலை இ.சி.ஆர்., சாலையை இணைப்பதால், எப்போதும் போக்குவரத்து பிசியான சாலையாக உள்ளது. வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், விபத்துக்களும் அதிகம் நடந்து வந்துள்ளது.
பொது மக்கள், வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திண்டிவனம்-மரக்காணம் இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பொருட்டு, ரூ.296 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 3.8.22ம் ஆண்டிலிருந்து பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றது.
இந்தப்பணிகள் ஒப்பந்தப்படி 5.3.24 ஆம் ஆண்டு முடித்துக்கொடுத்திருக்கவேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை பணிகள் முடியாமல் நீண்டு கொண்டே போகின்றது.
தற்போது, இந்த நான்கு வழிச்சாலையின் முகப்பு பகுதியான திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோட்டில் ரோடு டிவைடர், சாலையோரம் பிளேவர் கல் புதைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றது.
இதேபோல் மரக்காணம் கூட்ரோட்டில், சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறவழிச்சாலை வழியாக வரும் இடத்தில் சாலை அகலப்படுத்தப்பட்டு, சர்வீஸ் சாலை போடும் பணிகள் நடந்து வருகின்றது.
நான்கு வழிச்சாலையில் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரையில் புதிய சாலை பணிகள் முடிவடைந்து, ஒரு லேயர் மட்டும் தார் ரோடு போடப்பட்டுள்ளது.
மீதமுள்ள சாலையோரம் உள்ள பணிகள் முடிவடைந்த பிறகு, மீண் டும் நான்கு வழிச்சாலையில் இரண்டாவதாக புதிய தார் சாலை போடும் பணி நடைபெற உள்ளது. இதேபோல் ராவணாபுரம் ஏரிக்கரை பகுதியிலும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.
இதுபற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ''திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலையில் 85 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் அனைத்தும் டிச., மாதத்திற்குள் முடிந்துவிடும்.
இதில் ஆலங்குப்பம், பெருமுக்கல், ராவணாபுரம் ஆகிய இடங்களில் நிலஎடுப்பு பணிகள் நிறைவு பெறாமல் இருந்ததால், பணிகள் நிறைவு பெறுவதால் காலதாதம் ஏற்பட்டது.
இந்த பணிகள் முடிந்துள்ளதால், விரைவில் சாலை போடும் பணிகள் துவங்கும்'' என்று தெரிவித்தனர்.
பிரதான போக்குவரத்து சாலையாக உள்ள திண்டிவனம்-மரக்காணம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.