/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சீருடை தைக்கும் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர்... கோரிக்கை
/
சீருடை தைக்கும் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர்... கோரிக்கை
சீருடை தைக்கும் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர்... கோரிக்கை
சீருடை தைக்கும் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர்... கோரிக்கை
ADDED : ஜூன் 03, 2024 06:39 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர், தேவையான அளவில் துணியும், கூலி உயர்வும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 1,512 உள்ளன. இப்பள்ளிகளில், 3 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, அரசு சார்பில் பள்ளி இலவச சீருடை வழங்க தயாராகி வருகிறது.
குறிப்பாக, 1 முதல் 8ம் வகுப்பு வரை, 1 லட்சத்து 26 ஆயிரம் மாணவர்களுக்கு, இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் தலா 4 செட் சீருடைகள் வழங்கப்படும்.
பள்ளிகள் திறந்ததும் முதல் செட் சீருடையும், அடுத்த வாரங்களில் 3 செட் சீருடைகளும் வழங்கப்பட உள்ளது.
இந்த இலவச சீருடைக்கான துணிகள், சமூக நலத்துறை மூலம் கொள்முதல் செய்து, கூட்டுறவு மகளிர் குழுக்களிடம் வழங்கி தயார்படுத்தி வருகின்றனர்.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும், மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் துணி வழங்கி தைக்கும் பணி நடக்கிறது.
சங்கத்தில் உள்ள 1,082 மகளிர்களுக்கு, தலா 450 சீருடைகள் வரை தைப்பதற்கு, துணிகள் அளவீடு செய்து, வெட்டி வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறந்ததும், ஜூன் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு முதல் செட் சீருடை வழங்குவதற்காக துணிகள் வழங்கி, தைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விழுப்புரம் மகளிர் தையல் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு, தைத்து முடித்த துணிகளை ஒப்படைக்க வந்த உறுப்பினர்கள், கூலி உயர்வு கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூறியதாவது:
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு கால் சட்டை தைப்பதற்கு 22.05 ரூபாய். அரை கை சட்டைக்கு 22.05 ரூபாய். மாணவிகளுக்கு மேல் சட்டைக்கு 19.85 ரூபாய். பாவாடைக்கு 16.54 ரூபாய் வழங்கப்படுகிறது.
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேண்ட்டுக்கு 55.13 ரூபாய். மேல்சட்டைக்கு 27.56 ரூபாய். மாணவிகளுக்கான சுடிதாரில் பேண்ட், டாப்புக்கு 55.13 ரூபாய். ஓவர் கோட்டுக்கு 25 ரூபாயும் வழங்குகின்றனர்.
நாங்கள் கூலியை உயர்த்தி கேட்டு 2 ஆண்டுகளாக முறையிட்டு வருகிறோம். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டாவது கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் பள்ளி சீருடை போன்று தைக்க வேண்டும் என்கின்றனர்.
ஆனால், முழு அளவீடு செய்து துணி வழங்காமல், குறைவாக துணி கொடுக்கின்றனர். தரமான துணிகளையும், சரியான அளவீடு செய்தும் துணிகளை வழங்க வேண்டும்.
எங்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கே முழு தையல் துணி ஆர்டர்களையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஆண்டு தோறும் அரசு உத்தரவுபடி, மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, இலவச சீருடைகள் தைப்பதற்கு துணி வழங்கப்பட்டு வருகிறது.
தரமான துணிகளை, சரியான அளவீடு செய்து வழங்கப்படுகிறது. காலத்திற்கேற்ப சீருடைகளை, புதிய மாடலில் சிறப்பாக தைத்து வழங்க அறிவுறுத்தப்படுகிறது. அதில் உள்ள குறைகள் சுட்டிக்காட்டுவது வழக்கம். மகளிர் உறுப்பினர்களின் கோரிக்கைப்படி கூலியை, உயர்த்தி வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்' என்றனர்.