ADDED : பிப் 26, 2024 05:42 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் உலக சாரண, சாரணியர் இயக்க நிறுவனர் பேடன்பவுல் பிறந்த நாள், சிந்தனை நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில், விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, சாரணர் இயக்க முன்னாள் மாவட்ட செயலர் ரகுபதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ரகு, சாரணர் இயக்க மாவட்ட செயலாளர் மணி முன்னிலை வகித்தனர். மாவட்ட பயிற்சி ஆணையர் துளசிங்கம் வரவேற்றார்.
பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற சாரண மாணவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட சாரணிய ஆணையர், மாவட்ட கல்வி அலுவலருமான மகாலட்சுமி பரிசு வழங்கினார்.
விழாவில் 300 சாரண, சாரணியர்களும், 25 சாரண ஆசிரியர்களும் பங்கேற்றனர். சாரணர் இயக்க முன்னாள் அமைப்புச் செயலாளர் கோபால், துணைச் செயலாளர் முரளிதரன், ஒருங்கிணைத்தனர். போட்டியின் நடுவர்களாக சாரண ஆசிரியர்கள் சங்கர், ஜெபமணி, அகிலா ஆகியோர் செயல்பட்டனர். துணைச் செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.
