/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி
/
கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி
ADDED : பிப் 13, 2025 07:31 AM

வானுார் ; கிளியனுார் அருகே சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது, வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று காலை பைபாஸ் சாலை வழியாக கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் தென்பசார் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் ஓட்டி சென்றார்.
கிளியனூர் அடுத்த கேணிப்பட்டு சந்திப்பு அருகே காலை 5:00 மணியளவில் சென்றபோது, லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, டிரைவர் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
அப்போது, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தோஸ்த் வேன், சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறமாக மோதியது.
விபத்தில், வேனில் அமர்ந்து வந்த ஆற்காடு ஜோதி நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் மோதீஸ்வர், 24; என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தோஸ்த் வேன் ஓட்டிவந்த ஆரணி தாலுகா அனியாமலை கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் மோகன்குமார், 25; என்பவர் பலத்த காயமடைந்தார்.
கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த மோகன்குமாரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

