கழிவுநீரை தடுக்க, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நிதி செலவளித்தும் உறிஞ்சு குழிகள் முறையாக அமைக்காததால் வீணானது
கழிவுநீரை தடுக்க, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நிதி செலவளித்தும் உறிஞ்சு குழிகள் முறையாக அமைக்காததால் வீணானது
UPDATED : ஏப் 29, 2026 06:48 AM
ADDED : ஏப் 28, 2026 05:41 PM

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பயன்படும்உறிஞ்சு குழிகள் முறையாக அமைக்காததால் லட்சக்கணக்கான நிதி செலவழித்தும் வீணானது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உறிஞ்சு குழிகள் அமைத்து அதில் விடப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு விடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டது. 2017 -- 18 லிருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் தேங்கும் கழிவு நீரில் கொசு உற்பத்தியை தடுக்கவும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு கிராமத்திற்கும் 3, 4 உறிஞ்சுகுழிகள் அமைக்கப்பட்டன. இதற்காக ஒவ்வொரு குழிக்கும் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. இதே போன்று பெரிய வாறுகாலில் வெளியேறும் கழிவு நீர் மொத்தமாக உறிஞ்சு குழிகள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நீர்நிலைகளில் தண்ணீர் விடப்பட்டது. இதற்கு 1 குழிக்கு ரூ.1.40 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் இது போன்ற உறிஞ்சு குழிகள் பல கிராமங்கள், கண்மாய்கள், ஊருணி பகுதிகளில் அமைக்கப்பட்டது. ஆனால் முறையாக அமைக்காமலும் போதிய ஆய்வு செய்யாமலும் உறிஞ்சும் தன்மையற்ற இடங்களில் குழிகள் அமைத்ததாலும் இந்த திட்டம் பயனற்று போனது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கடமைக்கு நிதியை செலவழித்ததாலும், குழிகளை மக்களும் தொடர்ந்து பராமரிக்காமல் விட்டதாலும் இந்த திட்டம் பயனற்று போனது.
கோடை காலங்களில் அதிக வெப்பத்தினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடுகிறது. ஆயிரம் அடி போர்வெல் போட்டாலும் தண்ணீர் கிடைப்பது இல்லை. நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகத்தான் உறிஞ்சு குழிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பொது குடிநீர் குழாய் தரைமட்ட நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தண்ணீர் பிடிக்கும் போது வீணாகும் தண்ணீரை நிலத்தடிக்குள் செல்லும் வகையில் இந்த குழிகள் அமைக்கப்பட்டன. ஜல்லி, மணல், கிராவல் மண் உள்ளிட்டவைகள் அடுக்கடுக்காக நிரப்பப்பட்டு கழிவுநீர் இயற்கையாக வடிகட்டப்பட்டு நிலத்தடியில் சேரும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அதிகாரிகளின் மெத்தனம் மற்றும் சொதப்பல் காரணமாக மாவட்ட முழுவதும் இந்த திட்டம் வீணானது.
