/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டியும் பணி துவங்காதாதல் மக்கள் விரக்தி
/
திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டியும் பணி துவங்காதாதல் மக்கள் விரக்தி
திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டியும் பணி துவங்காதாதல் மக்கள் விரக்தி
திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டியும் பணி துவங்காதாதல் மக்கள் விரக்தி
UPDATED : செப் 08, 2024 06:29 AM
ADDED : செப் 08, 2024 04:15 AM

சிவகாசி: திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் அடுத்த கட்ட பணிகள் துவங்காததால் மக்கள் விரக்தியில் உள்ளனர். உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் துவக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி, திருத்தங்கலில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில் பிரதானமாக உள்ளது. இதனால் திருத்தங்கல் நகர் எந்நேரமும் பரபரப்பாக போக்குவரத்து நிறைந்திருக்கும். திருத்தங்கல் ரயில்வே வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ், பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.
தினமும் பத்துக்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்வே கேட் வழியாக தினமும் தொழிற்சாலைக்குச் தொழிலாளர்கள், பல்வேறு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நகருக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் பல்வேறு தேவைகளுக்கு சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ரயில்வே கேட்டை கடந்து வருகின்றனர்.
திருத்தங்கல் நகரை கடந்து சிவகாசிக்குள் நுழைவதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சிவகாசி வருவதற்கு எந்த ஒரு வாகனமும் திருத்தங்கல் ரயில்வே கேட்டினை கடந்து தான் வர வேண்டும்.
ரயில் இயக்கப்படும் நேரங்களான காலை, மாலையில் கேட் அடைக்கப்படும் போது, கேட்டினை கடப்பதற்காக டூவீலர், கார்களில் விரைந்து வருவதற்காக விபத்து நேரிடுகிறது. காலை 8:15 லிருந்து 9:30 மணிக்குள் இரு ரயில்கள் இந்த வழித்தடத்தில் செல்கிறது. அந்த நேரத்தில் 40 நிமிடம் கேட் அடைக்கப்படுகிறது. இதனால் அலுவலகம், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மதிய வேளையில் இரு முறை ரயில் இந்த வழித்தடத்தில் செல்கிறது. அந்த நேரத்தில் கொளுத்தும் வெயிலில் வாகன ஓட்டிகள் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
சில சமயங்களில் ரயில் செல்லும் பொழுது மழை பெய்தால் பெரிதும் அவதிப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக பணிகள் துவங்கப்பட்டது. ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏனெனில் மேம்பாலம் அமைக்க, இங்கு அதிகமாக குடியிருப்புகள், கடைகள் உள்ள இடங்களை கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேம்பாலம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இங்கு மண் பரிசோதனை பணியும் நடந்து, நில அளவீடு பணிகள் நடந்தது.
இதனைத் தொடர்ந்து ஜனவரியில் சாட்சியாபுரம், திருத்தங்கலில் பாலம் அமைக்க பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. ஆனால் திருத்தங்கலில் அதற்கு அடுத்த கட்டப் பணிகள் துவங்கவில்லை. எனவே விரைவில் திருத்தங்கலிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், மேம்பாலம் அமைப்பதற்காக இடம் அளவீடு செய்யும் பணி முடிவடைந்து, அரசிதழிலும் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இடம், கட்டடத்தின் மதிப்பு குறித்து உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி முழுமையாக முடிவடைந்த உடன் பாலம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும், என்றனர்.
பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர்: ரயில் வரும் போது கேட் அடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறையும் போராட்டம் தான். திருத்தங்கல் பஜாரில் மிகவும் குறுகிய ரோடு உள்ளது. இங்கு சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும். கேட் மூடும் போது கூடுதல் போக்குவரத்து நெருக்கடியால் அவதிப்படுகின்றோம்.
எனவே விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணியை துவங்க வேண்டும்.
அருண், தொழிலதிபர்: தொழில் நகரான இங்கு எண்ணற்ற கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. ரயில்வே கேட் பிரச்னைக்காகவே இப்பகுதியினர், சிவகாசியில் இருந்து மதுரை விருதுநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கு சாத்துார் சென்று அங்கிருந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் அவசரத்திற்கு வருகின்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் இதே நிலைதான்.