ADDED : ஜூன் 01, 2024 03:57 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட அணுகு சாலை பயனின்றி உள்ளதால், பஜார் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டி வழியாக கோபாலபுரம், ராமானுஜபுரம், கோவிலாங்குளம், கல்குறிச்சி, காரியாபட்டி, மதுரைக்கு செல்லலாம். பாலையப்பட்டி ஊருக்குள் பஸ்கள், பள்ளி மற்றும் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் வந்து செல்லும். பஜார் பகுதி ரோடு குறுகியதாக இருப்பதால் வாகனங்கள வந்து செல்ல சிரமமாக உள்ளது.
எதிரே வரும் வாகனங்கள் செல்ல முடியாமலும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அதிக அளவில் டூ வீலர்கள் பயன்பாடு உள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.
இதை கவனத்தில் கொண்டு 3 ஆண்டு களுக்கு முன்பு, பஜார் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அணுகு சாலை அமைக்க அரசு முடிவு செய்தது.
அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டிக்கு நுழையும் பகுதியில் உள்ள முத்தரையர் நகர் வழியாக மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையை அணுகுவதற்கு ஏதுவாக ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி இந்தப் பகுதி ரோடு அகலப்படுத்தப்பட்டது.
ஆனால், பணிகள் முடிவடைந்த பின், ரோடு பயன்பாட்டிற்கு வந்த பின்னும் இதன் வழியாக வாகனங்கள் செல்லாமல் பாலையம்பட்டி பஜார் பகுதியில் சென்று வருகிறது.
பிரச்சனை
முத்தரையர் நகர் வழியாக செல்லும் அணுகு சாலையில் வாகனங்கள் செல்லாமல் தொடர்ந்து பாலையம்பட்டி பஜார் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
கனரக வாகனங்கள் அணுகு சாலை வழியாக செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதி இருந்து வாகன ஓட்டிகள் இதை கண்டு கொள்ளாமல் ஊருக்குள் வந்து செல்கின்றனர். பஜார் பகுதிகளில் உள்ள ரோடு ஓர ஆக்கிரமிப்புகளாலும் நெரிசல் ஏற்படுகிறது.
தீர்வு
முத்தரையர் நகர் அணுகு சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நின்று கனரக வாகனங்களை இந்த ரோட்டில் செல்ல அறிவுறுத்த வேண்டும். பஜார் வழியாக கனரக வாகனங்களில் செல்ல அனுமதிக்க கூடாது.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் அருப்புக்கோட்டை முத்தரையர் நகர் சந்திப்பில் பிரியும் இடத்தில் உள்ள டிவைடரை அகற்ற வேண்டும்.
இதனால் மதுரை, தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த ரோடு வழியாக செல்ல வசதியாக இருக்கும். டிவைடர் இருப்பதால் வாகனங்கள் அணுகு சாலையை பயன்படுத்தி முடியாமல் போகிறது.
நிதி வீண்
கந்தசாமி, சமூக ஆர்வலர்: பாலையம்பட்டி முத்தரையர் நகர் செல்லும் அணுகு சாலையை ஊருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போடப்பட்டது. இதில் வாகனங்கள் செல்லாததால் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்தும் ரோடு வீணாக கிடக்கிறது. வாகனங்கள் அணுகு சாலை வழியாக செல்ல போக்குவரத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிவைடரை அகற்ற வேண்டும்
கண்ணன், தொழிலாளி: மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் இருந்து அருப்புக்கோட்டை முத்திரையர் நகர் அணுகு சாலையில் செல்வதற்கு, நான்குவழி சாலையில் இருக்கும் டிவைடர்களை அகற்றி அங்கு ஒரு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும். இதனால் மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இருந்து வாகனங்கள் அணுகுச்சாலையை பயன்படுத்த வசதியாக இருக்கும்.