ADDED : ஜூன் 02, 2026 12:06 AM

தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டி பேரூராட்சியில் மாத கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணிகளால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
செட்டியார்பட்டி பேரூராட்சி 15 வது வார்டு புனல் வேலி லட்சுமி நகர் பகுதியில் சாலை குடிநீர், தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் வசதியின்றி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மழைக்காலங்களில் முறையான சாலை வசதியின்றி குடியிருப்பில் தண்ணீர் புகுந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக லட்சுமி நகரில் டிச. மாதம் சாலை பணிகள் தொடங்கியது. ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கற்கள் பெயர்ந்து காலையில் நடந்து செல்ல முடியாத நிலையுடன் டூவீலரில் செல்வோர் விபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சி அதிகாரிகள் தரப்பில்: ஈரான் போர் காரணமாக தார் விலை அதிகரித்ததால் சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும், என்றார்.
