/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.45 வசூல்
/
நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.45 வசூல்
ADDED : ஜூலை 24, 2024 06:05 AM

சிவகாசி : நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.45 கட்டாய வசூல் செய்யப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார்கள் வடிவேல், ஜெயபாண்டி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
நாகு, ராமமூர்த்தி: நெல் கொள்முதல் மையத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.1 கமிஷனாக வசூல் செய்கின்றனர். வேளாண் துறையில் 3ம் ரக நெல் விதைகளை கொடுத்து விட்டு, முதல் ரக விதைக்கான விலையை பெறுகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கும் பின்னேற்பு மானியத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மடவார் வளாகம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைக்கு ரூ.45 பெற்றுக் கொண்டு தான் கொள்முதல் செய்கின்றனர்.
சப் கலெக்டர்: இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முத்தையா, மம்சாபுரம்: பொறியியல் துறையில் வேளாண் கருவிகளை அதிகப்படுத்த வேண்டும். குடிமராமத்து பணியில் கண்மாய்களில் உள்ள கலுங்கு, மற்றும் மடைகளை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கர்ணன், வன்னியம்பட்டி: கண்மாய்களில் மீன்பாசி குத்தகை தொகையில் 50 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் எந்த கண்மாயிலும் மீன்பாசி தொகை பாசன விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. காயல்குடி ஆறு துார்வாரப்படாததால் மழை காலங்களில் வெள்ளநீர் புகுந்து 15 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தாமஸ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்: காயல்குடி ஆறு கடந்த ஆண்டு துார்வாரப்பட்டது. வன்னியம்பட்டியில் 1 கிலோ மீட்டர் துாரத்திற்கு கழிவுகளை நேரடியாக ஆற்றில் விடுவதால் சேறும் சகதியுமாக மாறியதால் சீரமைக்க முடியவில்லை. விரைவில் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
மோகன்ராஜ், பாசன விவசாயிகள் சங்க தலைவர்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய் மடை சாவியை வைத்துக் கொண்டு, அறுவடை நேரத்தில் கண்மாயில் இருந்து நீர் திறந்து விடுவதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த முறையும் இதே போல் நடந்த போது காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கணேசன்: வாடியூர் கண்மாய்க்கு ஆனைக்குட்டம் அணையில் இருந்து நீர்ப் பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
சுப்பிரமணி: மேலபாட்ட கரிசல்குளம் கிராமத்தில் ராஜபாளையம் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி மலை போல் குவித்து வைத்துள்ளனர்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
அம்மையப்பன், ஞானகுரு, ராமச்சந்திர ராஜா: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வனத்துறையினர் காய்க்கும் மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு தருகின்றனர்.
இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளது. மரத்திற்கு ரூ.500 ம் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரமும் இழப்பீடு வழங்குகின்றனர். வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும்.
வனத்துறை அலுவலர்: மலையடிவாரப் பகுதிகளில் ட்ரோன் மூலம் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. பயிர் சேதத்திற்கான கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ், பட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

