/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேடாகிய கண்மாய், மாயமான நீர்வரத்து கால்வாய்
/
மேடாகிய கண்மாய், மாயமான நீர்வரத்து கால்வாய்
ADDED : பிப் 27, 2025 01:10 AM
காரியாபட்டி; துார்வாராமல் மேடாகிய கண்மாய், காணமால் போன நீர் வரத்துக்கால்வாய், கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் காரியாபட்டி பாஞ்சார் கண்மாயில் நீர் தேக்க முடியாமல் விவசாயம் செய்யாமல விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காரியாபட்டி பாஞ்சாரில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சின்ன கண்மாய் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 2 மடைகள் உள்ளன.
100க்கு மேற்பட்ட ஏக்கரில் பாசனம் நடைபெற்று வந்தது. நீர்வரத்து கால்வாய், காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் கண்மாய்க்கு நீர் ஆதாரமாக இருந்தது.
நாளடைவில் மழை பொழிவு குறைவாக இருந்ததால், வரத்து கால்வாய் துார்ந்து போனது. நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பால் காணாமல் போயின.
கண்மாய்க்கு நீர்வரத்து 15 ஆண்டுகளாக சரிவர கிடையாது. வயல்கள் விளைந்து பல ஆண்டுகள் ஆகின.
தற்போது சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்மாய் இருக்கும் அடையாளமே தெரியாமல் உள்ளது. கண்மாய் துார்வாரி 20 ஆண்டுகள் ஆகின. கண்மாய் மேடாக உள்ளது.
கிடைக்கிற தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
துார்ந்து போன கால்வாய்
பன்னீர்செல்வம், விவசாயி: இப்பகுதி முழுக்க விவசாயத்தை நம்பி உள்ளோம். போதிய மழை இல்லாததால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லை.
நாளடைவில் வரத்து கால்வாய் ஓடைகள் காணாமல் போயின. நீர்வரத்து இல்லாததால் கண்மாயில் தண்ணீர் நிரம்பாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. இப் பகுதியில் விவசாயம் செய்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. துார்வாரி 20 ஆண்டுகள் ஆகின. துார்வாரி வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமான மடைகள்
சிவா, விவசாயி: கண்மாய்க்கு நீர் ஆதாரமாக குண்டாற்றிலிருந்து வரத்துக்கால் மூலம் தண்ணீர் வந்தது. தற்போது வரத்து கால்வாய் மேடாக இருப்பதால் நீர் வரத்து சரி வர இல்லை.
கண்மாய்க்கு தண்ணீர் வராமல் வெளியேறி வருவதால் நிரம்புவதில் சிரமம் ஏற்படுகிறது. கண்மாய்க்கு நீர் வரத்துக்கான ஓடைகளை கண்டறிந்து துார்வார வேண்டும். மடைகள் சேதம் அடைந்து உள்ளன.
கண்மாயில் நிறமும் தண்ணீர் மடைகள் வழியாக வெளியேறி வருகிறது. வரத்து கால்வாய், மடையை சீரமைத்து நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.