/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பசுமையான சிறுவர் பூங்கா; மனதிற்கும் மகிழ்ச்சி
/
பசுமையான சிறுவர் பூங்கா; மனதிற்கும் மகிழ்ச்சி
ADDED : ஆக 12, 2024 05:23 AM

நம் முன்னோர் இயற்கையோடு ஒன்றிணைத்து வாழ்ந்தனர். ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் செயற்கையோடு பின்னி பிணைந்து வாழ்கிறோம். இயற்கையை பாதுகாத்து அதை நம் அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை.
செயற்கை அதிகம் மிகுந்த இவ்வுலகில் மனிதன் தனது மனநிம்மதியை திரும்ப பெறுவதற்காக இயற்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கிறான். இயற்கை சூழலில் வாழ்ந்த காலம் போய் இன்று இயற்கையை காண சுற்றுலா செல்லும் நிலைமையை மனிதன் எதிர் நோக்கியுள்ளான். இயற்கை அன்னையை நாம் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து மரம் நடுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் முக்கியமான கடமை. அப்போது தான் இந்தியா பசுமை அடையும். பசுமையைப் பேண மரங்களை நட வேண்டும். மரங்கள் மனித சமுதாயத்திற்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன.
இன்று காடுகள் மனித தேவைகளுக்காகவும், இயற்கை சீற்றங்களாலும் அழிவடைகின்றன. இதனை தடுத்து பசுமையைப் பேண மரங்களை நட வேண்டும். புவி வெப்பமடைவதைத் தடுக்க மரம் நடுவது முக்கியமானது.
அந்த வகையில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமையாக காட்சி அளிக்கிறது. இங்கு சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் தவிர, வேம்பு புங்கை தேக்கு உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. கண்ணுக்கு விருந்தளிக்கும் பூச்செடிகளும் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது. எல்லாமுமே பசுமையாக தெரிவதற்காக சுவர்களுக்கும் பச்சை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
மேலும் இதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதே போல் மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுப் புறத்தைத் துாய்மையாக வைத்திருந்தால் தான் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். பச்சைப்பசேலென்ற நிறம் கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆனந்தமே. இன்றைய நவீன யுகத்தில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்கு மரங்கள் அவசியம். இதனை கருத்தில் கொண்டு பூங்காக்கள் மட்டுமல்லாது மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
- சங்கீதா, மேயர், சிவகாசி.
உலக வெப்பமயமாதலை தடுக்கவும் மழை பொழிவை அதிகரிக்கவும் காரணமாக இருக்கும் மரங்களை வளர்ப்பது அவசியம். மாநகராட்சி அருகே உள்ள சிறுவர் பூங்காவில் இப்பகுதியினர் தாங்களாகவே மரங்களை பராமரித்து பேணிக் காத்தனர். மாநகராட்சி சார்பில் பூங்கா புனரமைக்கப்பட்டு தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது. தவிர குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும் ரம்யமான சூழ்நிலை காணப்படுகிறது.
- ரேணு நித்திலா, வார்டு கவுன்சிலர், சிவகாசி.