/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு கூடுதல் பஸ் தேவை
/
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு கூடுதல் பஸ் தேவை
ADDED : மார் 11, 2025 04:29 AM

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு ஏற்ப காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் மதுரை, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், தென்காசி, திருநெல்வேலி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் மூலம் விருதுநகரில் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைக்கு பணிக்காகவும், சிகிச்சை பெறவும் பலரும் வருகின்றனர். இவர்கள் சென்று வர ஏதுவாக காலை, மாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக கலெக்டர் அலுவலகம் வரை அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆனால் பஸ்களில் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் தற்போது ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் காலை, மாலை நேரங்களில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களின் தேவை அதிகரித்துள்ளது. பஸ்கள் இயக்கப்படாத நேரத்தில் பெரும்பாலான பயணிகள் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து புறப்பட்டு ராமமூர்த்தி ரோடு மேம்பாலத்திற்கு முன்பாக இறங்கி அங்கிருந்து உடைமைகளுடன் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் நடந்தே செல்கின்றனர்.
இவ்வழியாக இரவு நேரங்களில் செல்பவர்களிடம் மது போதையில் இருப்பவர்கள் ரகளையில் ஈடுபடுவதால் பலரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு காலை, மாலை நேரங்களில் செல்ல இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.