/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரையால் பாதிப்பு --நிரந்தர தீர்வு காணப்படுமா
/
நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரையால் பாதிப்பு --நிரந்தர தீர்வு காணப்படுமா
நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரையால் பாதிப்பு --நிரந்தர தீர்வு காணப்படுமா
நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரையால் பாதிப்பு --நிரந்தர தீர்வு காணப்படுமா
ADDED : செப் 16, 2024 06:15 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் நகர் பகுதி, குடியிருப்புகளை ஒட்டியுள்ள குளங்கள், ஊருணி, கண்மாய்களில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளால் ஏற்படும் பாதிப்பிற்கு நிரந்தரவு தீர்வு காண சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி ராஜபாளையம் நகர் பகுதி அமைந்துள்ளதால் நகரை சுற்றி கண்மாய், ஊருணி உள்ளிட்ட நீர் தேக்கங்கள் அதிகம். கண்மாயை ஒட்டியுள்ள கடம்பன்குளம், பிரண்டை குளம், அயன் கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய், கொண்டனேரி உள்ளிட்ட கண்மாய்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நேரடி பாசன வசதி பெறுவதற்கும் ராஜபாளையம் குடியிருப்பு வாசிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இந்நீர்நிலைகள் இருந்து வருகின்றன.
இதுதவிர வடுகர் ஊருணி, ஆவரம்பட்டி ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகளும் மக்களுக்கு பயன் அளித்து வருகின்றன. இந்நிலையில் குடியிருப்புகளை ஒட்டி உள்ளதால் சுலபமாக கழிவு நீரை கண்மாய்களிலும் ஊருணிகளிலும் கலந்து ஒரு பகுதி சாக்கடை குளமாக மாறி உள்ளது.
இதனால் ஆகாயத்தாமரைச் செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. கண்மாய்களில் நீர் இருப்பின் போது நீரின் மேற்பகுதி வரை படர்ந்து பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதும், கோடை காலங்களில் இலைகள் வழியாக நீராவியை அதிகமாக வெளியேற்றுவதும், நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து தண்ணீர் மட்டத்தை குறைக்கவும், கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாகவும் இருந்து வருகின்றன.
இது தவிர தண்ணீர் வெளியேற்றும் போது நீரோட்டங்கள் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் சந்திக்கின்றன. தனியார் அமைப்புகள் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் ஆகாய தாமரை அகற்றும் பணி நடந்தாலும் தொடர் நடவடிக்கை இல்லாததால் பிரச்னை நீடிக்கிறது.
விவசாயிகள் மக்களின் முக்கிய ஆதாரமாக உள்ள நீர் நிலைகளின் பாதிப்பிற்கு வித்திடும் ஆகாய தாமரையை நிரந்தரமாக அழிக்க ஒருங்கிணைந்த முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.