புதிய ஜல்ஜீவன் திட்டப் பணிகளையாவது தரமாக செய்ய எதிர்பார்ப்பு
புதிய ஜல்ஜீவன் திட்டப் பணிகளையாவது தரமாக செய்ய எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 28, 2026 04:35 PM
ADDED : ஜூலை 28, 2026 04:30 PM

அருப்புக்கோட்டை:மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தரமற்ற பணிகளால் வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காத நிலையில், புதிய ஜல்ஜீவன் திட்டத்தில் விடுபட்ட கிராமங்களில் செய்யும் பணிகளையாவது தரமானதாக செய்து குடிநீர் வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2024 க்குள் அனைவருக்கும் குடிநீர் என்ற இலக்கோடு பணிகள் துரிதப்பட்டு முடிவடைந்தது. திட்டம் முடியும் அடைந்தாலும் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் இணைப்பு காட்சி பொருளாக உள்ளது. தரமற்ற பணியால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புகளுக்கு ஏற்ப மேல்நிலைத் தொட்டிகள் இல்லை இருக்கின்ற மேல்நிலைத் தொட்டிகளுடன் கூடுதலாக ஜல்ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புகளை இணைத்து விட்டதால் வீடுகளில் தண்ணீர் வருவது குறைந்து போனது பல வீடுகளுக்கு தண்ணீரை வரவில்லை. அதிகாரிகளின் அலட்சியம், பணிகளின் போது ஆய்வு செய்யாமல் இருத்தல்,ஒப்பந்ததாரர்கள் தாங்கள் இஷ்டத்திற்கு பணிகளை செய்தல் போன்ற காரணங்களால் இந்தத் திட்டம் தோல்வியடைந்தது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பாலையம்பட்டி, செம்பட்டி, திருவிருந்தாள்புரம், குல்லூர்சந்தை உள்ளிட்ட பல கிராமங்களில் இந்தத் திட்டம் பொய்த்துப் போனது. பாலையம்பட்டியில் மக்கள் தினமும் குடிநீர் கேட்டு குடங்களுடன் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை இடுகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் குடிநீர் பணிகள் செய்ய பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அருப்புகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு கோடிக்கு மேல் நிதி வந்துள்ளது. புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்கினால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும். விடுபட்ட பகுதிகளுக்கு இந்தத் திட்டத்தில் குழாய் குடிநீர் இணைப்புகள் வழங்கினாலும் இருக்கின்ற குடிநீர் ஆதாரத்தை வைத்து தான் செய்ய முடியும். இதில் மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். உள்ளூரில் இருக்கின்ற நீர் நிலைகளை பராமரித்து தூய்மைப்படுத்தி மழை நீரை சேமிக்க கூடிய பணிகளை செய்தால் மட்டுமே இந்த திட்டம் முழுமை அடையும். இதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
உள்ளூர்களில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள் ஆகியவற்றை பராமரிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
____
