கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு:குழாய் உடைப்பு, மின் பழுதை சரிபார்ப்பதில் பிரச்சனை. . .
கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு:குழாய் உடைப்பு, மின் பழுதை சரிபார்ப்பதில் பிரச்சனை. . .
UPDATED : செப் 16, 2026 04:35 PM
ADDED : செப் 16, 2026 04:32 PM
அருப்புக்கோட்டை:மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராமங்களில் குடிநீர் பிரச்சனை மற்றும் அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளதால் அல்லல்படும் மக்களுக்கு தீர்வு அவசியமாகிறது.
அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லை. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் மூலம் குடிநீர் வசதிகளை செய்வதற்கென நிதி ஒதுக்கினாலும் முறையான பயன்பாடு, தரமற்ற பணிகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை செய்தாலும், தரமற்று ,கடமைக்கு செய்ததால், பெரும்பாலான கிராமங்களில் இந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளது. மக்கள் குடங்களுடன் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. சில கிராமங்களுக்கு 15 நாட்களுக்கு 1 முறை தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது. இதுவும், குழாய் உடைப்பு, மின்மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் தடைபடுகிறது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி, ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, குருந்தமடம், திருவிருந்தாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீரை தேடி மக்கள் குடங்களுடன் அலைகின்றனர். குழாய் மின்மோட்டார் பழுதால் விநியோகம் தடை பட்டால் உடனடியாக சரி செய்யப்படுவது இல்லை. ஊராட்சி செயலர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் சொல்லி அதற்கான திட்ட மதிப்பீடு அனுமதி பெற்று பணியை செய்வதற்கு பத்து நாட்களுக்கு மேல் ஆகி விடுவதால் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். பாலையம்பட்டி ஆத்திப்பட்டி ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தரமற்ற பணியால் மக்களுக்கு முறையான தண்ணீர் வழங்க முடியவில்லை.
இதேபோன்று திருச்சுழியில் ஆலடிபட்டி, பரட்டநத்தம், வடக்கு நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது.
தொடர்ந்து அடிக்கின்ற கோடை வெயிலின் தாக்கத்தால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் போர்வெல்கள் வறண்டு தண்ணீர் வருவது இல்லை. உட்கடை கிராமங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்சனை ஒரு பக்கம் வாட்டுகிறது, அதனுடன் பல கிராமங்களில் அத்தியாவசிய வசதிகளான வாறுகால், ரோடு, தெருவிளக்கு வசதிகள் ஆண்டுகளை கடந்தும் செய்யப்படாமலேயே உள்ளது.
மாவட்ட நிர்வாகம் கிராமங்களில் அத்தியாவசிய வசதிகளாக குடிநீர், ரோடு, வாறுகால் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
___
