/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவாரி பள்ளங்களில் விழுவதை தடுக்க கம்புகளால் தடுப்பு
/
குவாரி பள்ளங்களில் விழுவதை தடுக்க கம்புகளால் தடுப்பு
குவாரி பள்ளங்களில் விழுவதை தடுக்க கம்புகளால் தடுப்பு
குவாரி பள்ளங்களில் விழுவதை தடுக்க கம்புகளால் தடுப்பு
ADDED : ஏப் 13, 2024 02:30 AM

காரியாபட்டி : ஆபத்தான கல்குவாரிகளுக்கு நடுவே ரோடு இருப்பதால் விபத்தை தடுக்க கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தினர். அப்பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளதால், இரும்பு தடுப்பு, தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
காரியாபட்டி - கல்குறிச்சி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உள்ளன. உரிமம் பெற்று கல் குவாரிகள் நடத்தி வருகின்றனர்.
இதில் ஒரு சில இடங்களில் அதிக அளவில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, பின் மழை பெய்து தண்ணீர் நிரம்பி இருப்பதால் பாறைகளை வெட்டி எடுக்க முடியாமல் கிடப்பில் போட்டனர்.
இதில் 30 அடி முதல் 40 அடி வரை ஆழம் உள்ளது. இதில் தவறி விழுபவர்களை காப்பாற்றுவது கடினம். பயன்பாடின்றி ஏராளமான குவாரிகள் உள்ளன.
அது போன்று கல்குறிச்சி பாரதிநகர் அருகே ஆபத்தான குவாரிகளுக்கு நடுவில் வெயில் உகந்த அம்மன் கோயில், அய்யனார் கோயில் செல்லும் ரோடு உள்ளது. இந்த வழியாக பாரதி நகர், கோயிலுக்கு, விவசாய பணிகளுக்கு, தனியார் நிறுவனங்களுக்கு என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
குவாரியில் தவறி விழும் பட்சத்தில் காப்பாற்றுவது கடினம். ஆபத்தான சூழ்நிலை இருப்பதை அறிந்து அங்கு கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
பலத்த காற்று அடித்தாலே கம்புகள் சரிந்து விழுந்துவிடும். அவ்வாறு இருக்க ஆட்கள், வாகனங்கள் விபத்தில் சிக்கும் பட்சத்தில் கம்புகளால் தாக்குப் பிடிக்க முடியாமல், பலத்த சேதம் ஏற்படுவதை தடுக்க முடியாது.
அப்பகுதியில் நடந்து செல்பவர்கள், டூவீலர், கனரக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடக்கின்றனர். விபத்திற்கு முன் அப்பகுதியில் இரும்பு தடுப்பு ஏற்படுத்தியோ, தடுப்புச் சுவர் கட்டியோ விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

