/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பதநீர் உற்பத்தி குறைவால் கருப்பட்டி தயாரித்தல் குறைவு
/
பதநீர் உற்பத்தி குறைவால் கருப்பட்டி தயாரித்தல் குறைவு
பதநீர் உற்பத்தி குறைவால் கருப்பட்டி தயாரித்தல் குறைவு
பதநீர் உற்பத்தி குறைவால் கருப்பட்டி தயாரித்தல் குறைவு
ADDED : மே 19, 2024 04:46 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் |: ஸ்ரீவில்லிபுத்தூரில் பதநீர் உற்பத்தி குறைந்ததால் கருப்பட்டி தயாரிப்பும் குறைந்து, விலையும் கட்டுப்படி ஆகாத நிலையில் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மம்சாபுரம், செண்பகத்தோப்பு, திருவண்ணாமலை, பிள்ளையார் நத்தம், மேல தொட்டியபட்டி உட்பட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதநீர் இறக்குதல், கருப்பட்டி தயாரித்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
பனை மரத்திலிருந்து ஆண்டுதோறும் பங்குனி, சித்தரை, வைகாசி, ஆனி ஆகிய நான்கு மாதங்களில் பதநீர் அதிகம் கிடைக்கும் நிலையில் கருப்பட்டி தயாரிப்பிலும் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
30 ஆண்டுக்கு முன்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனை ஏறிய நிலையில் தற்போது 200 பேர் வரை மட்டுமே பனை ஏறுகின்றனர். இப்போதைய இளைய தலைமுறையினர் பனை ஏறுவதில் ஆர்வம் காட்டததால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
சீசன் மாதங்களில் கிடைக்கும் பதநீரில் குறிப்பிட்ட அளவு லிட்டர் பதநீரை ஸ்ரீவில்லிபுத்தூர் பனை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்து பதநீரை பதப்படுத்தி 200 மில்லி பாட்டில்களில் அடைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள தனது விற்பனை மையம் மட்டுமின்றி அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, மதுரை போன்ற வெளியூர்களிலும் விற்பனை செய்து வந்தனர்.
கடந்தாண்டு டிசம்பர் வரை மழை பெய்து வந்த நிலையில், இந்த ஆண்டு சீசன் துவங்கும் தை, மாசி மாதங்களில் மழை பெய்யாததால் பதநீர் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் கருப்பட்டி தயாரிப்பும் குறைந்துள்ளது. தற்போது 10 கிலோ கருப்பட்டி ரூ.2 ஆயிரத்திற்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், போதிய விலையோ, திருப்திகரமான லாபமோ இல்லாமல் கருப்பட்டி தயாரிப்பாளர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
ஒரு ஆண்டில் நான்கு மாதம் மட்டுமே தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ள நிலையில் மீதமுள்ள மாதங்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் நிரந்தர தொழில் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் தொகையை விலையை உயர்த்தி தர வேண்டும்.
பதநீர் இறக்குதல், கருப்பட்டி தயாரித்தலுக்கு தேவையான கருவிகளை அரசு இலவசமாக தர வேண்டும். பனை வாரியம் வாயிலாக நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
இத்தொழிலில் ஆண்டுக்கு ஆண்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஆண்டுக்கு 100 இளைஞர் வீதம் பனை ஏறுதல், பதநீர் இறக்குதல், கருப்பட்டி தயாரித்தல் போன்ற பயிற்சிகளை அரசு அளிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தில் பனைத்தொழில் காப்பாற்றப்படும் என கருப்பட்டி தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

