/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்து விழுந்த கோயில் தெப்பச்சுவர்
/
இடிந்து விழுந்த கோயில் தெப்பச்சுவர்
ADDED : ஏப் 23, 2024 12:31 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயில் தெப்பத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து கிடக்கிறது. தெப்ப முழுவதும் சுகாதார கேடாக உள்ளதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகே தெப்பக்குளம் உள்ளது.
இது ஒரு காலத்தில் சூரிய புஷ்கரணி என்றும் தீராத நோய்கள் தீர்க்கும் குளமாக இருந்துள்ளது. நாளடைவில் தெப்பக்குளம் பராமரிப்பு இன்றி கழிவுநீர் சேரும் குளமாக மாறிவிட்டது .தெப்பத்தை சுற்றியுள்ள வீடுகள் கடைகளின் கழிவுகள் தெப்பத்தில் விடப்படுகின்றன. தெப்பத்தை சுத்தமாகவும் மழை நீர் சேகரம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதில் கோயில் நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.
தெப்பத்தை சுற்றி நடைபாதையை அமைத்தும், சிசிடிவி கேமராக்கள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அழகு படுத்தப்படும் என நகராட்சி சார்பில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூமி பூஜை செய்தார். தெப்பத்தைச் சுற்றி ஒரு பகுதியில் மட்டும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்ட அத்துடன் பணி நிறுத்தப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, தெப்பத்தின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. தடுப்பு கம்பிகளும் பெயர்ந்து விட்டது. விபத்து ஏற்படும் முன், சுற்று சுவரை கட்ட வேண்டும். தெப்பத்தில் கழிவு நீரை அகற்றி மழைநீர் வரும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் போட்ட பணிகளை நகராட்சி தொடர்ந்து செய்ய வேண்டும்.

