ADDED : செப் 17, 2024 04:51 AM

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. பல ஊராட்சிகளில் போர்வெல் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஊராட்சிகளில் பத்தாயிரம் லிட்டர் முதல் முதல் 30 ஆயிரம் லிட்டர் வரையிலான மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. இவை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் மேல்நிலைத் தொட்டிகளின் தூண்கள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. மேலும் தொட்டிகளின் மேற்பரப்பிலும் அடிப்பரப்பிலும் பக்கவாட்டு சுவரிலும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. பல மேல்நிலைத் தொட்டிகளில் தொட்டிகளுக்கு மேலே செல்ல அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் சேதமடைந்து இடிந்து போன நிலையில் உள்ளன.
இதனால் தொட்டியில் ஏறி சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மேல்நிலைத் தொட்டியில் இருந்து விநியோகமாகும் குடிநீர் கலங்கலாகவும், புழுக்கள் நெளிந்து சுகாதாரம் இன்றியும் உள்ளது. குடியிருப்பு, பள்ளிகள் ,ரோட்டில் ஓரத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள் கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வின் காரணமாக அதன் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து விடுகின்றன.
ஊராட்சி தலைவர்கள் போதுமான நிதி வசதி இல்லை எனக் கூறி மேல்நிலைத் தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் கூட செய்யாமல் விட்டு விடுகின்றனர். விபத்துக்கள் ஏற்படும் முன் சேதமடைந்த மேல்நிலை தொட்டிகளை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றவோ, பராமரிக்கவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
