/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சீனிஅவரை விலை இருந்தும் விளைச்சல் இல்லை விவசாயிகள் வேதனை
/
சீனிஅவரை விலை இருந்தும் விளைச்சல் இல்லை விவசாயிகள் வேதனை
சீனிஅவரை விலை இருந்தும் விளைச்சல் இல்லை விவசாயிகள் வேதனை
சீனிஅவரை விலை இருந்தும் விளைச்சல் இல்லை விவசாயிகள் வேதனை
ADDED : ஜூன் 19, 2024 05:27 AM

விருதுநகர்,: விருதுநகரை சுற்றிய பகுதிகளில் சீனிஅவரை அறுவடை நடந்து வரும் நிலையில் விலை இருந்தும், விளைச்சல் குறைந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் கோடை மழையால் கண்மாய்களில் நீர் இருப்பு உள்ளது. விருதுநகரை சுற்றிய ஊரகப்பகுதிகளின் கண்மாய் அருகே வயல்களில் உள்ள கிணறுகளில் நீர் நிறைந்து காணப்படுகிறது. கிணற்று பாசனம் மூலம் சீனி அவரை, நித்தியகல்யாணி, செண்டு, கால்நடைகளின் உணவுக்கு சோளம் ஆகிய பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது.
கெப்பிலிங்கம்பட்டி அதனை சுற்றிய பகுதியில் 30 ஏக்கரில் விவசாயிகள் சீனிஅவரை பயிரிட்டுள்ளனர். சீனி அவரை பயிரிடுவதற்கு ஒரு ஏக்கருக்கு உழவு, கரம்பை அடித்தல், விதை, மருந்து, களை பறித்தல், வேலை ஆட்கள் கூலி என ரூ. 10 ஆயிரம் வரை செலவாகிறது. இப்படி செலவு செய்து நடவு செய்தாலும் மயில், காட்டுபன்றியால் கால் பகுதி பயிர்கள் பாழாகி விடுகிறது.
மேலும் விளைச்சல் இருக்கும் சமயத்தில் போதிய விலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு அறுவடையில் ஒரு வாரத்திற்கு 4 மூடை பறிக்கப்பட்டு, கிலோ ரூ. 40 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டாலும், விளைச்சல் குறைவால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயி ரவி கூறியதாவது: சீனிஅவரை 3 ஏக்கரில் நடவு செய்ததில் ஒரு ஏக்கரில் மட்டுமே பயிர்கள் வளர்ந்துள்ளது. மழை, வெயில் என சீதோஷ்ண நிலை மாறியது, மயில், காட்டுபன்றி, மான் ஆகியவற்றால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை இருந்தும் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.