/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் மின்வேலி
/
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் மின்வேலி
ADDED : ஆக 23, 2024 03:34 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் அனுமதியின்றி மின்வேலி அமைப்பதை தடுக்க மின்சாரத்துறை அதிகாரிகள், வனத்துறையினர் அடிக்கடி இரவு நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், மான்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இவைகள் சமீபகாலமாக வனப்பகுதிகளை கடந்து மலையடிவாரத்தில் உள்ள தோப்புகளில் புகுந்து மாமரங்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகவே நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த பொருளாதார பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
இதில் சில தோப்புகளில் அதன் உரிமையாளர்கள் முறையாக அனுமதி பெற்று சூரிய மின்வேலி அமைக்கிறார்கள். இதனால் வனவிலங்குகள் தோப்புகளில் நுழைவது தடுக்கப்படுகிறது. பலர் எவ்வித அனுமதியும் இல்லாமல் மின்வேலி அமைக்கிறார்கள். இது இரவு நேரங்களில் , வனவிலங்குகள் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராக்காச்சி அம்மன் கோயில் பகுதி தோப்பில் மின் வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்தது. எனவே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் அனுமதியின்றி மின்வேலி அமைப்பதை தடுக்க மின்சாரத்துறை மற்றும் வனத்துறையினர் இரவு நேரங்களில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.