/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெப்பக்குளம் வடிகால் ஆக்கிரமிப்பு
/
தெப்பக்குளம் வடிகால் ஆக்கிரமிப்பு
ADDED : மார் 02, 2025 06:08 AM

சாத்துார்: சாத்துார் சிவன் கோயில் தெப்பத்திற்காக அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் மீது ஆக்கிரமித்து செட் அமைக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் அகற்றவேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சாத்துார் சிவன் கோயில் தெப்பத்திற்கு பெருமாள் கோயில் 4 மாட வீதிகளில் பெய்து வரும் மழை நீரும், பங்களா தெரு, பிள்ளையார் கோயில் தெரு மாரியம்மன் கோயில் தெருவில் பெய்து வரும் மழை நீரும் குழாய் வழியாகவும் மழை நீர் வடிகால் மூலமும் வந்தடையும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டது.
இந்த மழை நீர் வடிகால் மூலம் தற்போது சிவன் கோயில் தெப்பத்திற்கு மழை நீர் வந்து சேர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெருமாள் கோயில் மாட வீதியில் இருந்து சிவன் கோயில் மாட வீதிக்கு வரும் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் மீது தனியார் சிலர் தகர கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மேலும் இங்கிருந்த உப்புத் தண்ணீர் அடிகுழாயையும் அவர்கள் மூடியுள்ளனர். இப்பகுதி கடைக்காரர்கள் உப்புத்தண்ணீருக்கும் அலைந்து திரியும் நிலை உள்ளது.ஆக்கிரமிப்பு தகர செட்டால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நகராட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே அதிகாரிகள் மழை நீர் வடிகால் மீது அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தகர செட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.