/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதைகுழி கிணறால் அச்சம், குண்டும் குழியுமான ரோடு
/
புதைகுழி கிணறால் அச்சம், குண்டும் குழியுமான ரோடு
ADDED : மே 19, 2024 05:02 AM

காரியாபட்டி ; பொது கிணற்றில் குப்பை கொட்டுவதால் புதைகுழி கிணறாக மாறி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படு மோசமாக இருக்கும் ரோடு, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் காரியாபட்டி வரலொட்டி ஆதிதிராவிடர் காலனி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி வரலொட்டியில் ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் 1 கி.மீ., தூரம் உள்ள ரோடு படு மோசமாக இருக்கிறது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆட்கள் நடந்து சென்றால் இடறி விடும் சூழ்நிலை உள்ளது. மழை நேரங்களில் சேரும் சகதியுமாக இருக்கிறது. விரிவாக்க பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.
வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. ஒரு சில வீதிகளில் உள்ள வாறுகாலில் மண் மேவி கிடப்பதால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. சேகரிக்கப்படும் குப்பையை அங்குள்ள பொது கிணற்றில் கொட்டி வருவதால் மேடாகி கிணறு இருக்கும் இடம் தெரியாமல் புதை குழியாக மாறி உள்ளது. ஆபத்தான சூழ்நிலை இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிணற்றை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படுமோசமாக இருக்கும் ரோடு
பாண்டியன், விவசாயி: ஆதி திராவிடர் காலனிக்கு செல்லும் 1கி.மீ., துாரமுள்ள ரோடு படுமோசமாக இருக்கிறது. சீரமைக்க வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்குகிறது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆட்கள் நடந்து சென்றால் இடறி விழும் சூழ்நிலை உள்ளது. ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதை குழியாக மாறியுள்ள கிணறு
அந்தோணி, விவசாயி: சேகரிக்கப்படும் குப்பைகளை பயன்பாடு இன்றி கிடந்த கிணற்றில் கொட்டுகின்றனர். தற்போது கிணறு இருக்கும் இடம் தெரியவில்லை. மழை பெய்து தண்ணீர் தேங்கி துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. குப்பை என நினைத்து அங்கு செல்வோர் புதைகுழியில் சிக்கும் அபாயம் உள்ளது. அப்பகுதிக்கு செல்ல அச்சமாக உள்ளது. குப்பையை அப்புறப்படுத்தி கிணற்றை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் கிடையாது
குருசாமி, விவசாயி: மீனாட்சி நகர் விரிவாக்க பகுதிகளில் தெருவிளக்கு, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. இருளாக இருப்பதால் இரவு நேரங்களில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். மழை நேரங்களில் சேரும் சகதிகமாக இருக்கிறது. வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாறுகால் மண் மேவி கிடப்பதால் தூய்மைப்படுத்த வேண்டும்.

