ADDED : ஆக 27, 2024 06:08 AM
சிவகாசி, : பாரம்பரிய சரவெடியை அனுமதிக்க வேண்டும் என சிவகாசியில் நடந்த பட்டாசு தொழிலாளர் உயிர் பாதுகாப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சிவகாசியில் விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு தொழிலாளர் உயிர் பாதுகாப்பு மாநாடு நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தேவா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் பாப்பா உமாநாத் வரவேற்றார். சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன், சச்சிதானந்தம் எம்.பி., பேசினர்.
பட்டாசு ஆலைகளில் குத்தகை முறையை ஒழிக்க வேண்டும், பட்டாசு ஆலைகளில் பாரபட்சமின்றி ஆய்வு நடத்த வேண்டும், தொழிலாளர்களின் வேலையை பறித்து பட்டினியில் தள்ளக் கூடாது, பாரம்பரிய சரவெடியை அனுமதிக்க வேண்டும், ஆலை மூடலால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநகர துணைச் செயலாளர் அன்னலட்சுமி நன்றி கூறினார்.

