ADDED : ஏப் 02, 2024 06:35 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : கண்டுகொள்ளப்படாத அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றுவேன் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த அ.தி.மு.க. கூட்டணி கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணசாமி பேசியதாவது:
ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதிக்கு நேரடியாக புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்தை கொண்டு வருவேன்.
பாராளுமன்றத்தில் தென்காசி தொகுதி வளர்ச்சிக்கு என்னால் குரல் கொடுக்க முடியும். அதற்காக பாடுபடுவேன்.
என்னை தேர்ந்தெடுத்தால் கண்டுகொள்ளப்படாத அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றுவேன்.
தொழிற்சாலைகள் கொண்டு வந்து வேலை வாய்ப்பு பெற்று தருவேன். இதற்காக பாராளுமன்றத்தில் வாதாடுவேன், இது தேர்தல் நேர வாக்குறுதியாக இல்லாமல் உறுதி பத்திரமாக உங்களுக்கு தெரிவிக்கிறேன் என பேசினார்.
ராஜபாளையத்தில் கிருஷ்ணசாமி பேசுகையில், மாணவ பருவத்திலேயே நான் அரசியலுக்கு வந்தாலும் எனக்கான களம் தென்மாவட்டங்களில் தான் தொடங்கியது.
கடந்த காலங்களில் நெசவாளர்கள், விவசாயிகள், விஸ்வகர்மா மக்கள் உள்ளிட்டோருக்கு ஆதரவாக நடத்திய போராட்டங்களை எடுத்துக் கூற ஆள் இல்லை.
இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.
