/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் மண்ணால் நிரப்பி ஆக்கிரமிக்கப்பட்ட நீர்வரத்து ஓடை கழிவு நீர் வீடுகளினுள் புகும் அபாயம்
/
விருதுநகரில் மண்ணால் நிரப்பி ஆக்கிரமிக்கப்பட்ட நீர்வரத்து ஓடை கழிவு நீர் வீடுகளினுள் புகும் அபாயம்
விருதுநகரில் மண்ணால் நிரப்பி ஆக்கிரமிக்கப்பட்ட நீர்வரத்து ஓடை கழிவு நீர் வீடுகளினுள் புகும் அபாயம்
விருதுநகரில் மண்ணால் நிரப்பி ஆக்கிரமிக்கப்பட்ட நீர்வரத்து ஓடை கழிவு நீர் வீடுகளினுள் புகும் அபாயம்
ADDED : மே 18, 2024 04:24 AM

விருதுநகர் : விருதுநகரில் சாத்துார் ரோட்டில் கவுசிகா நதிக்கு செல்லும் முக்கிய நீர்வரத்து ஓடையின் ஒரு பகுதி முழுவதும் மண் போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதை நீர்வள ஆதாரத்துறையினர் கண்டு கொள்ளாமல் விட்டால் மழை காலங்களில் கழிவுநீர் வீடுகளினுள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் நாளுக்கு நாள் ரோடு, ஓடை, நத்தம்புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை ரோடு ஆக்கிரமிக்கப்பட்டு மெயின் பஜாராக உள்ளது.
நகரில் போதிய பார்க்கிங் வசதி இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டுஉள்ளதால் ரோட்டின் ஓரங்களில் டூவீலர்கள், கார்கள்ஆக்கிரமிக்கின்றன. கவுசிகா நதியின் பல நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சாத்துார் ரோட்டில் வலதுபுறமாக செல்லும் நீர்வரத்து ஓடையில் முக்கால்வாசி பகுதியில் மண், கட்டட கழிவுகளை போட்டு நிரப்பி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு மிக மெதுவாக நடத்தப்பட்டுஉள்ளது. அதாவது நீர்வரத்து ஓடை என்பதால் அதில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. கொஞ்சம் கொஞ்சமாக கொட்டப்பட்டு முக்கால்வாசி ஓடை கொட்டப்பட்ட பின் பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை மெத்திஉள்ளனர் .
இந்த நீர்வரத்து கால்வாய் வழியாக தான் மெயின் பஜார், நகராட்சி ரோடு, கீழக்கடை தெரு, அருப்புக்கோட்டை ரோடு, கிருஷ்ணமாச்சாரி ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் கவுசிகா நதிக்கு செல்கிறது. அகலமாக இருந்த நிலையில் தண்ணீர் வேகமாக சென்றது. தற்போது கட்டட கழிவுகளை கொட்டி தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
நீர்வள ஆதாரத்துறையின் ஓடையை ஆக்கிரமிப்பை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து நீர்வரத்து ஓடையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி ஆக்கிரமித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் இது போன்ற கட்டட கழிவுகளை கொட்டி ரோட்டின் ஓரங்கள், நீர்வரத்து ஓடைகளை யொட்டி கடைகளை போடுவதற்கும், வாடகை வாகனங்களை நிறுத்துவதற்கும் ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.
கவுசிகா நதிக்கு செல்லும்நீர்வரத்து ஓடையின் அகலம் சுருங்கினால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகும் அபாயம் உள்ளது.உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி ஓடையில் கான்கிரீட் போட்டு கால்வாய் கட்ட வேண்டும்.
நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் மலர்விழி கூறியதாவது: உடனடியாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும், என்றார்.

