/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் அனுமதியில்லாத வாகன காப்பகங்கள் அதிகரிப்பு நெறிமுறைப்படுத்த எதிர்பார்ப்பு
/
விருதுநகரில் அனுமதியில்லாத வாகன காப்பகங்கள் அதிகரிப்பு நெறிமுறைப்படுத்த எதிர்பார்ப்பு
விருதுநகரில் அனுமதியில்லாத வாகன காப்பகங்கள் அதிகரிப்பு நெறிமுறைப்படுத்த எதிர்பார்ப்பு
விருதுநகரில் அனுமதியில்லாத வாகன காப்பகங்கள் அதிகரிப்பு நெறிமுறைப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : மே 24, 2024 02:02 AM
விருதுநகர்: விருதுநகரில் அனுமதியில்லாமல் ஆங்காங்கே வாகன காப்பகங்கள் முளைத்து வருகின்றன. ஆளுங்கட்சி பின்புலத்துடன் இயங்கும் இவர்களை உள்ளாட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. இதை நெறிமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் 10க்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன காப்பகங்கள் உள்ளன. இதில் நகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பகம் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஒன்று மட்டும் தான். புது பஸ் ஸ்டாண்டின் வாகன காப்பகம் முடங்கி உள்ளது. இந்நிலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் வாகன காப்பகங்கள் புதிது புதிதாக முளைத்துள்ளன.
நகராட்சி பகுதியில் ஆத்துப்பாலம், மீனாம்பிகை பங்களா, நகராட்சி அலுவலக ரோடு, மதுரை ரோடு, சிவகாசி ரோடு பகுதிகள், அல்லம்பட்டி பகுதிகளிலும், சிவஞானபுரம், கூரைக்குண்டு ஊராட்சிகளிலும் பல இடங்களில் தனியார் வாகன காப்பகங்கள் உள்ளன.
இவற்றில் பல வாகன காப்பகங்கள் உரிய அனுமதி பெறாமலும், பாதுகாப்பு முன்னேற்பாடு நெறிமுறை வசதிகள் ஏதும் ஏற்படுத்தாமல் கிடைத்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அனுமதி பெறாத வாகன காப்பகங்களால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த வருமானமும் இல்லை. இவற்றில் வாகனம் காணாமல் போனால் கூட யார் பொறுப்பு என்பது கேள்விக்குறி தான். பல தனியார் வாகன காப்பகங்களில் மின் வயரிங் சரிவர செய்யப்படவில்லை. இதனால் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்படுகின்றன. இதனால் வாகனங்களும் சேதம் அடைய வாய்ப்புள்ளது.
முறையான அனுமதி, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இவர்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சி பின்புலம் கொண்டவர்களாக உள்ளனர். வாகன காப்பக விதிமுறை படி இதை முறைப்படுத்த வேண்டும். சி.சி.டி.வி., இருப்பதையும், பாதுகாப்பு வசதி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறியதாவது: வணிக பயன்பாட்டிற்கு இந்த வாகன காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் நகராட்சிக்கு வரி செலுத்தப்படுகிறதா என்றால் கேள்விக்குறி தான். மேலும் பாதுகாப்பு குறைபாடுகளால் வாகனங்கள் சேதம் அடைந்தால் அதற்கு யார் பொறுப்பு. முறைப்படி வாகன காப்பகங்களை செயல்படுத்த வேண்டும், என்றார்.