/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெள்ளரி பிஞ்சுகளில் மஞ்சள் நோய்
/
வெள்ளரி பிஞ்சுகளில் மஞ்சள் நோய்
ADDED : மே 25, 2024 05:16 AM

நரிக்குடி : கோடை மழை காரணமாக வெள்ளரி செடிகளில் மழை நீர் தேங்கி மஞ்சள் நோய் தாக்கி வருவதால் பிஞ்சுகள் பாதிக்கப்பட்டு நஷ்டத்தை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நரிக்குடி பனைக்குடி, காரியாபட்டி எஸ்.மறைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கோடைகால சாகுபடியாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளரி பயிரிட்டுள்ளனர். நல்ல விளைச்சல் ஏற்பட்டு, பிஞ்சுகள் பறிக்கும் தருணத்தில் இருந்தது. கோடை வெயில் கடுமையாக இருந்ததால் வெள்ளரி பிஞ்சுகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கோடை மழை பெய்ததால் வெள்ளரிப்பயிர்களில் மழை நீர் தேங்கி வெள்ளரிப்பிஞ்சுகளில் மஞ்சள் நோய் தாக்கி பழுப்பு நிறத்தில் மாறியது. அப்படி விட்டு விட்டால் பரவும் என்பதால் பிஞ்சுகளை பறித்து குப்பையில் கொட்டி வருகின்றனர். நல்ல பலன் கொடுக்கும் நேரத்தில் இது போன்ற நோய் தாக்கத்தால் வெள்ளரி விவசாயம் பாதிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தாண்டவன், விவசாயி, பனைக்குடி: வெள்ளரி சீசன் துவங்கி, நல்ல கிராக்கி இருந்தது. வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். நல்ல லாபம் கிடைத்தது. திடீரென கோடை மழை பெய்து வெள்ளரிச் செடிகளில் மழை நீர் தேங்கியது. வெள்ளரிப்பிஞ்சுகளில் மஞ்சள் நோய் தாக்கி பழுப்பு நிறத்தில் மாறியது.
இதனை பயன்படுத்த முடியாது என்பதால் பறித்து குப்பையில் கொட்டி வருகின்றோம். செடியில் அப்படியே விட முடியாது. மற்ற பிஞ்சுகளுக்கு பரவும் என்பதால் பறிக்க வேண்டியுள்ளது. நல்ல விளைச்சல் தரும் நேரத்தில் பாதிக்கப்பட்டு, நஷ்டம் ஏற்பட்டதால் கவலையாக உள்ளது, என்றார்.

