ADDED : மார் 31, 2024 05:34 AM
சமீப காலமாக பிரசவம் மற்றும் அவசர ஆபரேசன் செய்யப்படவுள்ள நிலையில் உடனடி ரத்த உதவி தேவை என்ற வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள பல ரத்த தான தன்னார்வலர்கள் தகவல் அறிந்து தேவை உள்ளவரை தேடிச்சென்று ரத்த தானம் செய்து வருகின்றனர். இது ஒரு பேருதவியாக உள்ளது.
இது குறித்து மருத்துவத்துறையினர் கூறுகையில், சமீப காலமாக பெண்களுக்கு ரத்தம் ஆய்வு செய்யும் போது பரவலாகவேஹீமோகுளோபின் அளவு குறைந்து காணப்படுகிறது என்பதும், அதனைத் தொடர்ந்து மருந்து, மாத்திரை கொடுத்தும், பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
பொதுவாக ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரையிலும், ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
இதில் தற்போதைய வாழ்க்கை சூழலில் கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை படித்த, படிக்காத, ஏழை, பணக்காரர் என அனைத்து தரப்பு பெண்களிடமும் ஹீமோகுளோபின் அளவு குறைவாகவே காணப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கள் அன்றாட உணவு பட்டியலில் கீரைகள், காய்கறிகள் சேர்ப்பதும், தினம் ஒரு பழம் சாப்பிடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போதைய அவசர உலகில் பாஸ்ட் புட் உணவுகளும், ரத்த உற்பத்தியை அதிகரிக்காத உணவுகளும் சாப்பிடும் பழக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. ரத்த உற்பத்தி அதிகரிக்கவும், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் உணவுகளும் சாப்பிடுவது பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது.
அதிலும் தற்போதைய இளைய தலைமுறை பெண்கள், ருசிக்காகவும் பசிக்காகவும் பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடுகின்றோமே தவிர ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் பட்டாசு, ஸ்பின்னிங் மில்கள், விவசாயம் ஆகியவற்றில் பெண்கள் அதிகளவில் பணியாற்றி வரும் சூழ்நிலையில் தங்கள் உடல் நலம் குறித்தோ, ஆரோக்கியத்தையோ கவனத்தில் கொள்வதில்லை.
எனவே, பெண்களுக்கு ரத்த உற்பத்தி மற்றும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும் குறித்தான விழிப்புணர்வு பள்ளி, கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
