/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலெக்டர் அலுவலக ஜங்ஷனில் மேம்பால பணி துவங்குமா விபத்துகளுக்கு தீர்வு கிடைக்குமா என மக்கள் எதிர்பார்ப்பு
/
கலெக்டர் அலுவலக ஜங்ஷனில் மேம்பால பணி துவங்குமா விபத்துகளுக்கு தீர்வு கிடைக்குமா என மக்கள் எதிர்பார்ப்பு
கலெக்டர் அலுவலக ஜங்ஷனில் மேம்பால பணி துவங்குமா விபத்துகளுக்கு தீர்வு கிடைக்குமா என மக்கள் எதிர்பார்ப்பு
கலெக்டர் அலுவலக ஜங்ஷனில் மேம்பால பணி துவங்குமா விபத்துகளுக்கு தீர்வு கிடைக்குமா என மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 22, 2024 04:41 AM
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் வளாகத்தின் முன் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை செய்து 2 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதுவரை கட்டுமான பணிகள் துவங்காததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள், அரசு ஊழியர்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை செல்கிறது. இதை கடந்து தினமும் அரசு ஊழியர்கள், மக்கள் கலெக்டர் அலுவலகம், வளாகத்தில் உள்ள மற்ற அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது.கலெக்டர் அலுவலகம் முன்பும், சாத்துார் படந்தால் விலக்கு நான்கு வழிச்சாலையிலும் மேம்பாலம் அமைப்பதற்காக 2009 ல் திட்டமிடப்பட்டது.
ஆனால் பணிகள் அப்படியே பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின் ஆட்சி மாற்றத்தால் 2021 வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த பாலப்பணிகள் துவங்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திற்கும் மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் அதிக அளவில் வருவதால் ரோட்டை கடக்கும் போது பலர் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர் கதையாக உள்ளது.
2021ல் தி.மு.க., பொறுப்பேற்றதும் வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகம் முன்பு விரைவில் பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தார். 2022 மார்ச்சில் மண் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
இவை டில்லிக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் பின் பால வடிவமைப்பு, திட்டவரைவு தயார் செய்யப்பட்டது.
இதையடுத்து 2 ஆண்டுகள் 2 மாதங்களாகியும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் கலெக்டர் அலுவலகம் செல்ல அரசு ஊழியர்கள், மக்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம் வந்து செல்பவர்கள், போலீசார் விபத்தில் சிக்காமல் சென்று வர முடியும்.
மேலும் நான்கு வழிச்சாலையை ஓட்டிய பகுதிகளில் குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குடியிருப்பு வாசிகளும் சர்வீஸ் ரோடு வழியாக வந்து கலெக்டர் அலுவலக சந்திப்பை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இவ்வழியாக செல்லும் லாரிகள், வேன்கள், கார்கள் நான்கு வழிச்சாலையில் வேகமாக சென்று கட்டுபாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதி மக்கள் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது.
இந்த பணியை துவங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாமதிப்பதன் காரணம் விளங்கவில்லை. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் தலையிட்டு பாலப்பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்.
பணிகளை விரைந்து துவக்குங்கள்
ஜெயபாரத், சமூக ஆர்வலர்: பாலப் பணிகளை துவக்குவதில் தாமதம் ஏற்படுவதால் மக்கள், அரசு ஊழியர்கள் அச்சத்துடன் ரோட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வடமலைக்குறிச்சி சர்வீஸ் ரோடு இல்லாததால் தினமும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் எதிர்திசையில் செல்கின்றன.
எனவே மக்களின் நலனிற்காக கொண்டுவரப்பட்ட திட்ட பணிகளை விரைந்து துவக்க வேண்டும்.
ரோட்டை கடக்கவே அச்சம்
- நடராஜன், நெய் வியாபாரம்: கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு மேம்பாலப் பணிகளை துவங்காததால் நான்கு வழிச்சாலை கடந்து செல்வதற்கு அச்சப்பட வேண்டியுள்ளது.
மேலும் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவக்கல்லுாரி, விளையாட்டு அரங்கத்திற்கு செல்பவர்கள் விபத்துக்குள்ளாகாமல் செல்ல மேம்பாலப்பணிகளை துவங்க வேண்டும்.