/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அவதியில் அருப்புக்கோட்டை மக்கள்
/
அவதியில் அருப்புக்கோட்டை மக்கள்
ADDED : மார் 11, 2025 04:35 AM

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா வராதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு தினமும் 300 க்கும் மேற்பட்ட பஸ்களும், ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகளும் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இதை இடித்து விட்டு புதிய நவீன வசதிகளுடன் கூடிய பஸ் தான் கட்ட முடிவு செய்யப்பட்டது. பின்னர் 8 கோடி ரூபாய் நிதியில், 2023 மே மாதம் பணிகள் துவங்கியது.
அதுவரை எதிரே தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இதில் பயணிகளுக்கு தேவையான எந்தவித வசதிகளும் இல்லை. பயணிகள் சிரமத்துடனே பஸ்கள் ஏற வேண்டி உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் பல நாட்கள் பணி கிடப்பிலும் போடப்பட்டு மந்தகதியில் நடந்து வருகிறது. விரைவாக முடிப்பதற்கு நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்துவதும் இல்லை. பணிகளை துரிதப்படுத்தக்கூடிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2024 ஜூன் மாதம் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். அதன் பின்னர் நவம்பரில் திறக்கப்படும் என்றனர். கடைசியாக 2025 மார்ச் முதல் வாரத்தில் திறக்கப்படும் என்றனர். ஆனாலும் பணிகள் எதுவும் முடியாத நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் உறுதியாக திறக்கப்படும் என்கின்றனர். மாதங்கள் தான் கடந்து போகின்றதே தவிர பஸ்ஸ்டாண்டு பணிகள் என்றைக்கு முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பஸ் ஸ்டாண்ட் பணிகளை துரிதமாக முடிக்க நகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும். மழைக்காலத்தில் மழையிலும், கோடை காலத்திலும் வெயிலிலும் மக்கள் பஸ் ஸ்டாண்டில் நின்று சிரமப்படுகின்றனர். விரைவில் பஸ் ஸ்டாண்ட் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.