/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டின் ஓரங்களில் குவித்துவைக்கப்படும் மண் குவியல்கள்
/
ரோட்டின் ஓரங்களில் குவித்துவைக்கப்படும் மண் குவியல்கள்
ரோட்டின் ஓரங்களில் குவித்துவைக்கப்படும் மண் குவியல்கள்
ரோட்டின் ஓரங்களில் குவித்துவைக்கப்படும் மண் குவியல்கள்
ADDED : ஏப் 16, 2024 03:42 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே தாதம்பட்டியில் இருந்து ஒண்டிப்புலிநாயக்கனுார் ரோட்டின் ஓரங்களில் குவித்து வைக்கப்படும் மண் குவியல்களால் ரோட்டின் பாதை குறுகலாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாதம்பட்டியில் இருந்து ஓண்டிபுலிநாயக்கனுார் செல்லும் ரோட்டின் ஓரங்களில் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக அருகில் இருக்கும் பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து ரோட்டின் ஓரங்களில் கொட்டி வைத்துள்ளனர். இந்த மண் குவியல்கள் தேவைக்கு அதிகமாக குவித்து வைக்கப்பட்டிருப்பதால் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன.
மேலும் இந்த பகுதிகளில் அதிக அளவில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரோடு வழியாக தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன. இவை ரோட்டில் செல்லும் போது மண் குவியல்கள் இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று லாரி சென்ற பின்னர் தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் டூவீலரில் வருபவர்கள் லாரியை முந்த முயற்சிக்கும் போது மண் குவியலில் மோதி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ரோட்டை முறையாக சீரமைத்து ஓரங்களை பலப்படுத்தாமல் வெறும் மண் குவியல்களை மட்டும் கொட்டி வைப்பதால் எந்த பயனும் இல்லை என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே ரோட்டின் ஓரங்களில் அளவுக்கு அதிகமாக கொட்டி வைத்துள்ள மண் குவியல்களை அகற்றி முறையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

