/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆடிப்பெருக்கை எதிர்பார்த்து உழவு பணிகள் மும்முரம்
/
ஆடிப்பெருக்கை எதிர்பார்த்து உழவு பணிகள் மும்முரம்
ADDED : ஜூன் 21, 2024 03:58 AM

விருதுநகர்: விருதுநகரில் இன்னும் ஒரு மாதத்தில் ஆடிப்பெருக்கு வரவுள்ள நிலையில் அதை எதிர்பார்த்து நடவு செய்வதற்காக விளைநிலங்களை உழும் பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.
விருதுநகரில் மக்காசோளம், சிவப்பு சோளம், கம்பு, சூரியகாந்தி, எள் என மானாவாரி பயிர்கள் நடவு செய்யப்படுகின்றன. இவற்றிற்கு பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படாது. இதனால் விவசாயிகளுக்கு பிரச்னை இருக்காது. இருப்பினும் ஆடிப்பட்டத்தில் தான் விவசாயிகள் விதை நடவு செய்வர்.
காரணம் வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் கருகாத சூழல் ஏற்படுவதுடன் மகசூல் சற்று அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் ஆடிப்பெருக்கு வரவுள்ளது. இப்போது உழுது வைத்தால் தான் ஜூலையில் ஏதேனும் தென்மேற்கு பருவ காற்றால் சாரல் அடித்தால் நிலம் வளப்பட வாய்ப்புள்ளது. இதை பயன்படுத்தி ஆனி மாதமான இப்போதே விவசாயிகள் நிலத்தை உழும் பணிகளை முடுக்கி விட்டு வடமலைக்குறிச்சி, வீரசெல்லையாபுரம், பாவாலி, பேராலி உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக மக்காசோளம், சிவப்பு சோள விவசாயிகள் இப்போது இருந்தே ஆர்வமுடன் பணிகளை செய்து வருகின்றனர். கோடை நேரம் வரை அறுவடை இருந்தவர்கள், கோடை உழவு செய்யாதோர் இது போன்ற நேரத்தை பயன்படுத்தி நிலத்தை உழுவதால் மண்ணில் ஈரப்பதம், ஆக்சிஜன் அதிகரிக்கிறது.