மூதாட்டியிடம் செயின் பறிப்பு
சிவகாசி: சிவகாசி வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி 80. இவரது மூன்று மகன்களும் தனியாக வசித்து வருகின்றனர். ராஜலட்சுமி தனியாக வீட்டில்இருந்து வந்தார். இவருக்கு மகன்கள் தினமும் சாப்பாடு கொடுத்த பின்னர் அவரின் பாதுகாப்பு கருதி வீட்டை பூட்டிச் சென்று விடுவர். இதனை கவனித்த மர்ம நபர் மாடி வழியாக உள்ளே புகுந்து அவரின் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் செயினை திருடி தப்பினார். டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
சிவகாசி: சிவகாசி சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் கருத்த பாண்டி 19. இவர் 2023ல் கொலை வழக்கில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தார். பின்னர் வெளியே வந்த இவர் மூன்று மாதத்திற்கு முன்பு மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியான அவரது மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்ற நிலையில் கருத்த பாண்டி மது அருந்தி வந்தார். இந்நிலையில் கருத்த பாண்டி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
அமரர் ஊர்தி டிரைவர் மர்ம சாவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராமலட்சுமி, 35, தனியார் பள்ளியில் ஆசிரியை. இவரது கணவர் துரைமுருகன், 53,அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அமரர் ஊர்தியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பணிக்கு வராததால் பொறுப்பாளர் சூர்யா, ராமலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். ராமலட்சுமி தன் உறவினர்களிடம் சொல்லி வீட்டில் கணவர் இருக்கிறாரா என பார்த்து வரச் சொல்லி உள்ளார். அவர்கள் பார்த்தபோது வீட்டில் காயங்களுடன் இறந்த நிலையில் துரைமுருகன் கிடந்துள்ளார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.