மாவட்டத்தில் 2023 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக அணைகள் கண்மாய்கள், குளங்கள், கிணறுகளில் தண்ணீர் நிரம்பியது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்தது. இதனால் மாவட்டத்தில் பசுமையான சூழல் காணப்பட்டது.
ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்களில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது. செண்பகத் தோப்பு பேயனாறு, சதுரகிரி தாணிப்பாறை நீர்வரத்து ஓடையில் தண்ணீர் வற்றி காணப்படுகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் பல்வேறு நகரங்களில் சுத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இல்லாத வகையில் உள்ளது. குறிப்பாக மேல்நிலை தொட்டிகள் முழு அளவில் சுத்தம் செய்யப்படாததால் தண்ணீர் கலங்கலாக வருகிறது.
மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகளிலும் தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்படுத்தினாலும் அங்கிருந்து போதிய அளவிற்கு தண்ணீர் கிடைக்காததால் உள்ளூர் தண்ணீரையும் கலந்து சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு இரண்டு தண்ணீரையும் கலந்து சப்ளை செய்வதால் சளி, இருமல், தொண்டை வலி போன்ற நோய் பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் கோபாலபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு தான், அந்த கிராமத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. கழிவுநீர், வாறுகால்கள் சுத்தம் செய்யப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை அங்கு சுகாதார கேடு காணப்பட்டது. இச்சம்பவம் கிராமப்புறங்களில் முறையான சுகாதார வசதிகள், பாதுகாப்பான குடிநீர் சப்ளை இல்லாத நிலையை எடுத்துக்காட்டுகிறது.
மம்சாபுரம் பேரூராட்சியில் சில வார்டுகளில் தண்ணீர் கலங்கலாாகவும், சுத்த மற்ற முறையிலும் வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் சூழலில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பல்வேறு தெருக்களில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் செல்கிறது. பல இடங்களில் குடிநீர் குழாய் வால்வுகள் தரையோடு தரையாக இருப்பதால் கழிவுகள், தூசிகள் தண்ணீருடன் கலக்கும் வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கழிவு நீர் வாறுகால் அருகில் குடிநீர் குழாய் வால்வுகள் இருப்பதால் இரண்டும் கலக்கும் அபாயம் உள்ளது.
தற்போது லோக்சபா தேர்தல் பணியில் முழு அளவில் அனைத்து பிரிவு அதிகாரிகளும் கவனம் செலுத்தும் நிலையில், குடிநீர் சப்ளை விஷயத்தில் அலட்சியப்போக்குடன் இருந்துவிடக் கூடாது. ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் முறையான குடிநீர் சப்ளை நடப்பதையும், குழாய் உடைப்பு இல்லாமலும், கழிவு நீருடன் குடிநீர் கலந்து விடாத வகையிலும் பாதுகாப்பான குடிநீர் சப்ளை செய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

