ADDED : ஏப் 13, 2024 02:35 AM

ஸ்ரீவில்லிபுத்தூர், : அரசு பஸ் டிப்போ இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டு மதுரை, தேனி, விருதுநகர், சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லும் வகையில் நேரடியாக பஸ்கள் இயக்கப்படாததால் பல ஆண்டுகளாக சிரமத்தை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 20 ஆயிரம் மக்கள் தொகை இருந்தபோது, 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழக டிப்போ திறக்கப்பட்டு சுற்றியுள்ள நகரங்களுக்கும், தென்காசி, திருநெல்வேலி, திங்கள் சந்தை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்ட நகரங்களுக்கும் நேரடி பஸ்கள் இயக்கப்பட்டது.
தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் விருதுநகர், மதுரை, தேனி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி போன்ற நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர். இதற்காக செங்கோட்டை மற்றும் ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்களில் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இப்பஸ்களில் ராஜபாளையத்திலேயே சீட்டுகள் முழு அளவில் நிரம்பி விடுவதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பயணிக்கும் மக்களும், வழித்தட பகுதிகளான கிருஷ்ணன் கோவில், நத்தம்பட்டி, அழகாபுரி பகுதி மக்களும் உட்கார இடமின்றி நின்று கொண்டும், படிகளில் தொங்கிக் கொண்டும் பயணிக்க வேண்டிய நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
குறிப்பாக விடுமுறை நாட்கள் முடிந்து வேலை நாட்கள் துவங்கும் நாட்களிலும், தினசரி காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 5: 00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் மதுரை, தேனி, விருதுநகர், அருப்புக்கோட்டை நகரங்களுக்கு செல்ல வேண்டுமெனில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் டிப்போவில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை சென்று அங்கிருந்து நேர அட்டவணைப்படி புறப்பட்டு தேனி, மதுரைக்கு பஸ்கள் இயக்கப்படுவதால், செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம் வரை உள்ள பயணிகள் பயனடைகின்றனர். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூர் பயணிகளோ தவிக்கின்றனர்.
அதிலும் தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் முடிந்து மதுரை, தேனி, விருதுநகர் செல்ல வேண்டுமெனில் மிகுந்த சிரமத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் சந்திப்பது தொடர்ச்சியாகவே நீடிக்கிறது.
தற்போது சென்னையில் இருந்து வத்திராயிருப்புக்கு 2 அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் பராமரிப்புக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் டிப்போவிற்கு வந்தாலும் மீண்டும் சென்னை செல்லும்போது வத்திராயிருப்பு சென்று தான், அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி மக்கள் சென்னைக்கு செல்ல நேரடி பஸ் வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.
எனவே, கடந்த 40 ஆண்டுகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் விருதுநகர், மதுரை, தேனி, சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்படும் வகையில் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமும் சிரமம்
-கிருஷ்ணகுமார், சுய தொழில் முனைவோர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுக்காண்டு மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் தினமும் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ரீதியாக மதுரை, தேனி, விருதுநகர் போன்ற நகரங்களுக்கு பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்படும் வகையில் பஸ்கள் இயக்கப்படாததால் நின்று கொண்டு தான் பயணிக்க வேண்டி உள்ளது.
உள்ளூரில் அரசு போக்குவரத்துக் கழக டிப்போயிருந்தும் தினமும் சிரமத்துடனே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, நேரடி பஸ்ஸில் இயங்கவேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை அவசியம்
-ராஜசேகர், சுய தொழில் முனைவோர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பிரிக்கப்பட்ட வத்திராயிருப்பில் இருந்து கூட தற்போது தேனி, மதுரை, விருதுநகர், தென்காசிக்கு நேரடி பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், செங்கோட்டை, ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் இருந்து புறப்பட்டு குமுளி, மதுரை, திருச்சி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் செல்லும் பஸ்களை நம்பி தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் டிப்போவில் உள்ள ரூட் பஸ் களை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்படும் வகையில் நேரடியாக இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை உடனடி அவசியமாகும்.

