ADDED : ஜூலை 05, 2024 11:12 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு மக்கள்எளிதில் வந்து செல்ல முடியாதவாறு ரோடுகளில் வாகன ஆக்கிரமிப்புகள் காணப்படுவதால் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் வர முடியாத நிலை காணப்படுகிறது. இங்கு வரும் நோயாளிகள் ரோட்டில் நடக்க கூட முடியாத நிலை உள்ளது.
மாவட்டத்தில் எந்த ஊரிலும் இல்லாத வகையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் மட்டுமே பஸ்டாண்டிற்கு அருகில் அரசு மருத்துவமனை உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வத்திராயிருப்பு, சிவகாசி, ராஜபாளையம் தாலுகாவை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்தும் மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.
மேலும் இங்கு டயாலிசிஸ், எக்ஸ்ரே, ஸ்கேன், சித்தா, பிசியோதெரபி, மனநலம், குழந்தைகள் நலன், பிரசவம் என பல்வேறு சிறப்பு பிரிவுகள் இருப்பதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளி நோயாளியாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளியாகவும் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அரசு மருத்துவமனைக்கு டூவீலர்கள்,ஆட்டோக்கள் வருவதுநாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும்மழைக்காலங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும். இதனால் தினமும் காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்புகளும், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களாலும் எளிதில் ஆம்புலன்ஸ்கள் வர முடியாத நிலை காணப்படுகிறது.
உழவர் சந்தையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு எளிதாக செல்வதற்கு ரோடு இருந்தாலும்,அந்த ரோட்டில் நகராட்சி வாகன காப்பகமும், மீன் கடைகளும் ஆட்டோக்களும், லாரிகளும் நிறுத்தப்படுவதால், டூவீலரில் கூட வர முடிவதில்லை.
இதேபோல் அரசு மருத்துவமனையின் வடக்கு பகுதியில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் நகராட்சி வாகன காப்பகத்தில் சைக்கிள்கள், டூவீலர்கள் இரு அடுக்காக நிறுத்தப்படுகிறது. அதன் எதிர்புறம் சர்ச் வாசலில் ஆட்டோக்கள், லோடு வேன்கள், தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு, ரோடு குறுகலாகிவிட்டது.
பஸ் ஸ்டாண்ட் மேற்கு பகுதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மணிக்கூண்டு வழியாக வருவதற்கு ரோடு இருந்தாலும் அதனை ஒரு வழி பாதையாக போக்குவரத்து காவல்துறை மாற்றி வைத்துள்ளதால் ஆம்புலன்ஸ்கள் எளிதில் மருத்துவமனைக்கு வர முடியவில்லை.
இதே போல் சர்ச் சந்திப்பில் இருந்து டவுன் போலீஸ் ஸ்டேஷன், மார்க்கெட் வழியாக அரசு மருத்துவமனைக்கு வரும் ரோட்டின் இருபுறமும் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெருக்கடியும் நிலவுவதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்களோ, தீயணைப்பு வாகனங்களோ செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
இதனால் தினமும் நேயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும், ஆம்புலன்ஸ்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலை காணப்படுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.
வேண்டும் அவசர வழி
-வேலாயுதம், ரோட்டரி சங்க நிர்வாகி: தற்போது அரசு மருத்துவமனையின் பிரதான வாசல் வழியாக தான் மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். அவர்களின் வாகனங்களும் வந்து செல்கிறது. விபத்து மற்றும் உயிர் காக்கும் நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறவும், ஆம்புலன்ஸ்கள் எளிதில் வந்து செல்லவும் அவசர வழி உருவாக்குவது அவசியம். இதற்கு உழவர் சந்தையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு அவசர வழியை ஏற்படுத்த வேண்டும்.
இடையூறு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்
-ராஜசேகர், ரோட்டரி நிர்வாகி: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான மக்கள்சிகிச்சை பெற வந்து செல்லும் நிலையில் அவர்கள் சிரமமின்றி வந்து செல்ல இடையூறு இல்லாதநிலையை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு வரும் அனைத்து ரோடுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அப்புறப்படுத்த வேண்டும்.
தீர்வுகள்
உழவர் சந்தையில் இருந்து அரசு மருத்துவமனையின் வடக்கு வாசல் வழியாக அவசர வழி ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனை சுற்றியுள்ள நகராட்சி வாகன காப்பகங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஆக்கிரப்புகளை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ்கள் எளிதில் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.