ADDED : டிச 14, 2024 05:07 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகர், பல பகுதிகளில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை போலீசார், நகராட்சி, நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்ளாததால் மக்கள் தினமும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை நகரில் மதுரை ரோடு, அண்ணாதுரை சிலை பகுதி, பெரியகடை வீதி, திருச்சுழி பஜார் உட்பட குறுகலான ரோடுகள் அமைப்பில் உள்ளது.
இந்தப் பகுதிகளில் தான் கடைகள், காய்கறி மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள்,கோயில்கள், பள்ளிகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதிகள் இவை. புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து மதுரை ரோடு, அண்ணாதுரை சிலை, திருச்சுழி ரோடு வழியாக அனைத்து பஸ்களும் வந்து செல்லும்.
இதே போன்று தெற்கு தெரு பகுதி ஒரு வழி பாதையாக செயல்பட்டு வருகிறது. முக்கியமான அனைத்து பகுதிகளும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் தினம் தினம் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பிரச்னை
அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இதனால் மதுரை ரோடு, அண்ணாதுரை சிலை பகுதி, திருச்சுழி ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் அதிகமாகி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. ஏற்கனவே ரோடு குறுகலான அமைப்பில் இருப்பதாலும், அதையும் நடைபாதை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாகனங்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது.
கடைக்காரர்கள் ரோடு வரை தங்கள் கடையை நீட்டித்து உள்ளதால் அங்குள்ள நடைபாதை மறைக்கப்பட்டு மக்கள் ரோட்டில் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
அண்ணாதுரை சிலை பகுதியை சுற்றிலும் டூவீலர்கள் சைக்கிள்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்தப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சரக்குகளை இறக்க வரும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் வந்து செல்ல வேண்டும் என போலீஸ் அறிவுறுத்தியும், கடைக்காரர்கள் தங்கள் இஷ்டப்பட்ட நேரத்தில் வாகனங்களை நிறுத்தி சரக்குகளை இறக்குவதால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது.
நகரின் அனைத்து ரோடு ஓரங்களில் உள்ள நடைபாதைகள் முற்றிலும் ஆக்கிரமிப்பால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
தீர்வு
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகளை ஒரு ஆண்டுக்கு ஒரு முறை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை போலீசார் இணைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க ரோடுகளை அகலப்படுத்த வேண்டும். ஒரு வழி பாதையை முறையாக செயல்படுத்த வேண்டும். தாறுமாறாக வாகனங்களை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் நிறுத்தக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
குறிப்பிட்ட நாளில் ஆக்கிரமிப்புகளை எந்தவித பாரபட்சமின்றி அகற்றவும், நெடுஞ்சாலைத்துறையினர் பஜார் பகுதிகளில் உள்ள ரோடுகளை முறையாக அளந்து மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசாரும் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு செய்து ஆக்கிரமிப்புகள் செய்யாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலட்சியம்
அழகர்சாமி, சமூக ஆர்வலர்: அருப்புக்கோட்டையில் மட்டும் தான் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் முக்கியமான பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். அண்ணாதுரை சிலை பகுதியில் தாறுமாறாக டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் தினம் தினம் ஏற்படுகிறது. ரோடுகளை அகலப்படுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே தீர்வு கிடைக்கும். ஆக்கிரமிப்புகளால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
பாரபட்சம்
சீனிவாசன், ரியல் எஸ்டேட்: அருப்புக்கோட்டை முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை எடுக்கும் தேதியில் கடமைக்கு அகற்றாமல் ஒட்டுமொத்த ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக எந்தவித பாரபட்சமின்றி அகற்றினால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். முக்கியமான ரோடுகளை விரிவுபடுத்தி உடனடியாக ரோடு அமைக்க வேண்டும்.