/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவியும் குப்பையால் சுகாதாரக்கேடு
/
குவியும் குப்பையால் சுகாதாரக்கேடு
ADDED : ஆக 09, 2024 12:08 AM

சாத்துார்: இருக்கன்குடியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது.
ஆடி மாதம் தற்போது நடைபெற்று வருவதால் இருக்கன்குடி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லுகின்றனர். இதன் காரணமாக இருக்கன்குடி ஊராட்சியில் குப்பை கழிவுகள் அதிக அளவில் குவிந்து வருகிறது.
வெளியூர்களில் இருந்து அதிக அளவில் வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் கேரி பைகளை ஆங்காங்கே வீசி செல்லுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் கேரிப்பை குப்பை அதிக அளவில் குவிந்து வருகிறது. குறிப்பாக அர்ச்சனா நதியில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து இதன் மூலம் சுகாதாரத் கேடும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சுவாமி நகர்வலம் வருவது வழக்கம் அப்போது அர்ச்சுனா நதியில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அர்ச்சுனா நதியில் சுவாமி இறங்கும் பகுதியில் தற்போது பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் அதிக அளவில் குவிந்து உள்ளன. தற்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில் பிளாஸ்டிக் கழிவு, கேரிப்பைகளில் தேங்கும் மழை நீரில் ஏடிஸ் கொசு உற்பத்தி ஆகும் அபாயம் உள்ளது.
இதனால் ஏடிஸ் கொசுக்கடியால் டெங்கு, மலேரியா காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொசுக்கடியால் உடல்நல பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது.
எனவே ஊராட்சி நிர்வாகம் அர்ச்சுனா நதியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி துாய்மை செய்திட வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.