ADDED : ஏப் 16, 2024 03:40 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள புறநகர் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றியும், கட்டடங்கள் கட்டியும் பயனில்லாமல் வீணாக கிடக்கிறது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கஞ்சநாயக்கன்பட்டி. இதில் 50க்கும் மேற்பட்ட தெருக்களும், பூபால் நகர், லட்சுமி நகர், ராஜிவ் நகர், காந்தி நகர் உட்பட, 10 க்கும் மேற்பட்ட புற நகர் பகுதிகள் உள்ளன.
இ சேவை மையம், மகளிர் சுய உதவி குழு கட்டடம் மற்றும் விவசாயிகளுக்கு பயன்படாமல் உள்ள களம், மட்கும் குப்பை, மட்காத குப்பை பிளான்ட் உட்பட கட்டி ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து விட்டது. வாறுகால்கள் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் இடிந்தும், சேதமுற்றும் உள்ளது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குழாய்கள் முறையாக போடப்படவில்லை.
பூபால் நகரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு பயன்பாட்டிற்கு வராமலேயே இடியும் நிலையில் உள்ளது. தெருக்களில் குப்பையை சேகரித்து ரோடு ஓரங்களில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களின் அருகில் எரிப்பதால் மரங்களும் கருகி பாழாகின்றன. தினம் தினம் எரிக்கப்படும் குப்பைகளில் ஏற்படும் புகையால் மக்கள் மூச்சு திணறல் உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் இரவு நேரங்களில் தெருவில் நடக்க மக்கள் பயப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊருக்கு அருகில் உள்ள தும்பை குளம் கண்மாய் சுகாதாரக் கேடாக உள்ளது.
கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் மறுகால் ஓடையில் தடுப்பு சுவர் இல்லாமல் இருப்பதால் அருகில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் மழைக் காலங்களில் தண்ணீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. மறுகால் ஓடை அருகில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். புறநகர் பகுதிகள் உருவாகிய பல ஆண்டுகள் ஆன நிலையில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
