ADDED : பிப் 07, 2025 04:10 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மலையரசன் கோயில்பகுதியில் ரோடு சேதம் அடைந்து பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன், இங்குள்ள கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. தெரு விளக்குகள் குறைவான வெளிச்சம் தருவதால் இரவு நேரங்களில் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
அருப்புக்கோட்டை மலையரசன் கோயில்பகுதி ஒரு புறம் நகராட்சி 16வது வார்டும், மற்றொரு புறம் 17வது வார்டையும் உள்ளடக்கி உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோட்டில் இருந்து மலையரசன் கோயில் செல்வதற்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள திருநகரம் சந்திப்பு பகுதியில் உள்ள ஓடையின் அருகில் ரோடு பள்ளமாக பதிக்கப்பட்ட கற்கள் சரிந்து உள்ளது. இரவு நேரங்களில் டூவீலர்கள் மற்றும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது.
ஏராளமானோர் இந்த ரோடு வழியாகத்தான் கோயிலுக்கு வாக்கிங் செல்ல வருகின்றனர். அதிகாலையில் வருவதால் ரோட்டில் உள்ள பள்ளம் தெரியாமல் விழ வேண்டியுள்ளது. பல மாதங்களாக ரோடு சேதமடைந்து இருப்பதை நகராட்சி சரி செய்வதில் மெத்தனம் காட்டுகிறது. இந்தப் பகுதியில் உள்ள மழை நீர் வரத்து ஓடையின் வழியாக பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும்.
ஓடை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே அடைபட்டு கழிவுநீர் விடப்பட்டு சுகாதார கேடாக உள்ளது. மழைக்காலத்தில் கண்மாயில்இருந்து தண்ணீர் ஓடையின் வழியாக திரும்பி குடியிருப்பு பகுதிகளில் வந்து விடுகிறது. ஓடையை துார்வார இப்பகுதி மக்கள்பலமுறை கோரிக்கை வைத்தும் நகராட்சி கண்டு கொள்ளவில்லை.
மெயின் ரோடு மற்றும் தெருக்களில் போடப்பட்டுள்ள எல்.இ.டி., பல்புகள் எரிந்தும் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. நன்கு வெளிச்சம் தரக்கூடிய பல்புகளை பொருத்த வேண்டும்.
மலையரசன் கோயில் பகுதியை ஒட்டி தான் பெரிய கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகள், சிறு குளங்கள் உள்ளன. நீர் பிடிப்பு பகுதிகளை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து பிளாட்டுகளாக மாற்றியுள்ளனர். இதே போன்று மழைநீர் வரத்து ஓடைகளும் ஆக்கிரமிப்பு செய்து ஓடையே இல்லாமல் செய்து விட்டனர்.
நகராட்சியும், வருவாய்த்துறையும் இதற்கு துணையாக பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையரசன் கோயில் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுவதால் வருபவர்களை விரட்டி கடிக்கிறது.
விபத்து ஏற்படுத்தும் ரோடு
பாலமுருகன், தொழிலாளி: மலையரசன் கோயில்மெயின் ரோடு சேதம் அடைந்து பள்ளமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தெரியாமல் விழுந்து விபத்து ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள்இந்த வழியாகத்தான் செல்கின்றனர்.
6 மாதமாக ரோடு சேதம் அடைந்து இருப்பதை நகராட்சியில் பலமுறை புகார் கொடுக்கும் நடவடிக்கை இல்லை. தற்போது ரோடு சிறிது சிறிதாக பலம் இழந்து பெரிய பள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
வெளிச்சம் இல்லை
ராஜா, தொழில்முனைவோர்: மலையரசன் கோயில் பகுதியில் உள்ள தெருக்கள், மெயின் ரோடுகளில் புதியதாக எல்.இ.டி., விளக்குகள் பொருத்தியுள்ளனர். இதில் போதுமான வெளிச்சம் இல்லை. பல்புகள் எரிந்தும் பயன் இல்லை.
மலையரசன் கோயிலுக்கு அதிகாலையில் வருவதால் விளக்குகளின் வெளிச்சம் போதுமானதாக இல்லை வயதானவர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. அதிக வெளிச்சம்தரக்கூடிய பல்புகளை பொருத்த வேண்டும்.
நாய்கள் தொல்லை
மாரிமுத்து, தொழிலாளர்: தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த பகுதி வழியாக பள்ளி செல்லும் மாணவர்களை விரட்டி கடிக்கிறது. நாய்கள் தொல்லையால் அதிகாலையில் மலையரசன்கோயிலில் வாக்கிங் செல்ல வருபவர்கள் பயப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
