/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜவ்வாக இழுக்கும் பழைய பஸ் ஸ்டாண்ட் பணி
/
ஜவ்வாக இழுக்கும் பழைய பஸ் ஸ்டாண்ட் பணி
ADDED : மார் 02, 2025 06:10 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் ஆண்டு கணக்கில் நீட்டித்து வருவதால் மழையிலும் வெயிலிலும் ரோட்டில் நின்று பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டடம் சேதமடைந்ததால் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.90 கோடி மதிப்பில் 2023 ஜன. மாதம் பணிகள் தொடங்கியது. இங்கிருந்து கிராம பகுதிகளுக்கு சென்று வரும் பஸ்கள் மகப்பேறு மருத்துவமனை முன்பிருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகிறது.
பழைய கட்டடம் இடிக்கப்பட்டு பஸ்கள் உள்நுழையவும் வெளியேறவும் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டு இரண்டு ஓட்டல்கள், புறக்காவல் நிலையம், சுகாதார வளாகம், 27 வணிக கடைகள் கட்டப்பட்டு வருகிறது. பணி தொடங்கும் போது ஓராண்டுகள் கட்டுமானம் முடியும் என அறிவிப்புடன் தொடங்கி தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்து நுழைவு வாயில், பெயிண்ட் பணிகளும் மீதம் உள்ளது. திறப்பு விழா காணாததால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு வரிசையாக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை, மழை வெயிலிலிருந்து ஒதுங்க வசதி இல்லை. இரவு நேரங்களில் தகுந்த மின்விளக்கு இல்லாமல் மாணவிகள் பெண்கள் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது. தற்காலிக கழிப்பறையும் ஏற்பாடு செய்யாமல் தினமும் மகளிர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் விலைக்கு வாங்க வேண்டி உள்ளது.
பஸ்களின் பயண கால அட்டவணை தகவல் பலகை அமைக்கப்படாமல் வணிக கடைகளில் விசாரித்து சங்கடத்திற்கு உள்ளகின்றனர். பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பின்றி தொடரும் சிரமத்தை போக்க பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.