/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறங்காவலர் பெயரிலான நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றம்
/
அறங்காவலர் பெயரிலான நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றம்
அறங்காவலர் பெயரிலான நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றம்
அறங்காவலர் பெயரிலான நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றம்
ADDED : செப் 12, 2024 12:47 AM
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கோட்டையூர் வருவாய் கிராமத்தில், பழமை வாய்ந்த மாவூத்து உதயகிரிநாதர் சுவாமி கோவில் உள்ளது. இது, ஹிந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பட்டியல் கோவில்.
இதற்கு இனாமாக வழங்கப்பட்ட, 388 ஏக்கர் நிலங்கள் கோவிலைச் சுற்றி உள்ளன. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய்.
பல ஆண்டுகளுக்கு முன் பரம்பரை அறங்காவலராக இருந்த காசிகிரி கோஷாகியார் என்ற தனிநபர் பெயரையும் சேர்த்து, வருவாய் ஆவணங்களில் பட்டா தாக்கலாகி, தற்போது பரம்பரை அறங்காவலராக உள்ள ரூபா பாய் பெயரில் உள்ளது.
இந்நிலையில், கோவில் பெயரிலேயே கோவில் நிலங்களின் வருவாய் ஆவணங்கள் இருக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதையடுத்து, தனிநபர் பெயரில் இருந்த கோவில் நிலங்களை, உதயகிரிநாதர் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்ய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்தது.
பரம்பரை அறங்காவலர் ரூபா பாய், தன் பெயரில் இருந்த பட்டாவை கோவில் பெயருக்கு மாற்றம் செய்து வழங்க, விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு செய்தார்.
இதையடுத்து, அறநிலையத்துறை ஆய்வாளர், ஆலய நிலங்கள் தனி தாசில்தார் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். காசிகிரி கோஷாகியர் என்ற பெயரில் தாக்கலாகி இருந்ததை ரத்து செய்து, உதயகிரிநாத சுவாமி கோவில், மாவூத்து என்ற பெயரில் பட்டா திருத்தம் செய்ய விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து நேற்று மாலை, கோவில் நிலங்கள் தனி தாசில்தார் மாரிமுத்து, சர்வேயர் குழுவினர் நிலங்களை நேரடி ஆய்வு செய்தனர்.
இந்த கோவில் நிலங்களில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்கவும், தனிநபர் பெயரில் பட்டா மாறுதல் செய்வதைத் தடுக்கவும், ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.